கடலூர்: பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் உள்ள 40 தெருக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதற்காக கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் மனு அளித்து, அளித்து வெறுத்து போய் நிற்கின்றனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இங்கு 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சிக்கான வாக்காளர் பட்டியலில் ஆற்றங்கரை கிழக்குத் தெரு, சஞ்சீவிராயர் கோயில் தெரு, ஏகாம்பர ஆசாரி தெரு, பெரிய கடை தெரு உட்பட 40 தெருக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இந்த நிலை கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
அதே நேரத்தில் இந்த 40 தெருக்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் வேறு தெருக்களில் இடம்பெற்றுள்ளன. இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டு விட்டனர். தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் மனு அனுப்பியுள்ளனர். ஆனாலும் அதே சிக்கல் நீடிக்கிறது.
கடந்த இருநாட்களாக பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு முகாம் நடந்தது. அப்போது இடம் பெற்ற பட்டியலிலும் குறிப்பிட்ட 40 தெருக்களின் பெயர்கள் விடுபட்டே இருந்தன.
இந்த சிறப்பு முகாமுக்கு வந்த பரங்கிப்பேட்டை பயணியர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் கலீல் பாகவீ மற்றும் கவுன்சிலர் அருள்முருகன் உள்ளிட்டோர், அங்கிருந்த அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்க, கோட்டாட்சியரிடம் மனு கொடுக்குமாறு அவர்கள் தற்போதும் தெரிவிக்க, தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க, பரங்கிப்பேட்டை நகரில் கடந்த இரு நாட்களாக இவ்விஷயம் பேசு பொருளாகியிருக்கிறது.
இதுபற்றி கவுன்சிலர் அருள்முருகனிடம் கேட்டதற்கு, “இதனால், நடைமுறைச் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பிட்ட வாக்காளர் அந்தத் தெருவில் இருக்கிறாரா என்று சரிபார்க்க செல்லும்அலுவலர், ‘இந்த நபர் இங்கில்லை’ என்று அந்த தெருவில் வசிப்போர், தெரிவிக்க உடனே பெயரை நீக்குகிறார்.
குறிப்பிட்ட வாக்காளரோ நமது பெயர் இந்தத் தெருவில் இல்லை என்றாலும், அந்தத் தெருவில் இருக்குமே! என்று கடந்த முறை நடந்ததை நினைவில் வைத்து குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் செல்கிறார். இந்த முறை அங்கு அவரது பெயர் இருப்பதில்லை. 15 வருடங்களாக இந்தச் சிக்கல் நீடிக்கிறது. இது சரி செய்ய வேண்டிது மிகமிக அவசியம்” என்று தெரிவிக்கிறார்.