குடும்பத்தினரை செல்போன் அடிமைத்தனத்திலிருந்து மீட்க, இல்லத்தரசி ஒருவர் மேற்கொண்ட அதிரடி நடைமுறைக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
அன்றாட வாழ்க்கையில் நம் அனைவருக்கும் செல்போன் என்பது தவிர்க்க முடியாத வஸ்துவாகி விட்டது. கைவசம் சற்றே செல்போன் இல்லாது போனாலும், கையொடிந்து போனது போல அங்கலாய்ப்பவர்கள் நம்மில் அதிகம். இதுவே செல்போனுக்கு அடிமையாகும் அளவுக்கு சிலரை பாதிக்கவும் செய்திருக்கிறது. உள்ளங்கைக்குள் உலகை கொண்டுவந்து குவிக்கும் செல்போனின் அனுகூலங்களும் வயது வித்தியாசம் பாராது அடிமைகளை உருவாக்கி வருகிறது.
இந்த செல்போன் அடிமைகளால் குடும்பங்களில் இயல்பு குலைவதும் நடக்கிறது. அவரவர் தனித்தீவுகளாக தங்கள் செல்போனுடன் ஒடுங்கிக்கொள்வதால், குடும்பமாக ஒரே கூரையின் கீழ் வாழ்வதன் நோக்கமும் அடிபட்டுப்போகிறது. நேசம் அடிபட்டுப்போவதுடன், உறவுகளுக்குள் புரிதல் இன்மையும், பிரச்சினைகளும் தலைதூக்க செல்போன்களே காரணமாகின்றன. குடும்பத்தாரோடு இருக்கும்போதேனும் அனைவரும் செல்போனுக்கு சற்று விடைதர வேண்டும் என்பதே பெரும்பாலான இல்லத்தரசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
அப்படியான செல்போன் அடிமைகள் நிறைந்திருக்கும் குடும்பத்தின் தலைவி ஒருவர், அதிரடியாக மேற்கொண்ட நடவடிக்கை இணையத்தில் வரவேற்பு பெற்று வருகிறது. மஞ்சு குப்தா என்ற அந்த இல்லத்தரசி தனது கூட்டுக்குடும்பத்தின் இணக்கம் செல்போனால் சீரழிவதாக குமைகிறார். செல்போன் அடிமைத்தனத்திலிருந்து குடும்பத்தினரை மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்கிறார். அதன்படி, முத்திரைத்தாளில் ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதில் கையெழுத்திடச் செய்கிறார்.
காலையில் எழுந்ததும் முதல்வேலையாக செல்போன் நோண்டுவதை நிறுத்திவிட்டு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சாப்பாட்டு மேஜையில் செல்போன்களை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தினருடன் கலந்து பேசியவாறு உணவருந்த வேண்டும். பாத்ரூமில் செல்போன் தடை செய்யப்படுகிறது... என்றெல்லாம் செல்போனை முன்வைத்தே ஒப்பந்த ஷரத்துகள் தொடர்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் பிசகுவோர் அந்த மாதத்தில் ஸ்விக்கி அல்லது சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்ய தடைக்கு ஆளாவார்கள்.
இந்த ஒப்பந்ததின் நகல் சமூக ஊடகங்களில் வெளியானதும், மேற்படி இல்லத்தரசிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
காணொலி காட்சி வாயிலாக ஆஜரான செந்தில் பாலாஜி: 14வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
நடிகர் விஜய் மீது செருப்பு வீசிய சம்பவம்: போலீஸில் பரபரப்பு புகார்!
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்... தமிழக அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
தமிழகத்தில் மதுவால் கொலை அதிகரிக்கிறது... திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!