வருமானம் கொட்ட வேண்டுமானால் கடின உழைப்பு மட்டுமல்ல, மாத்தி யோசி டெக்னிக் மூலம், பிறர் வழக்கமாக செய்வதை வித்தியாசமாக வெளிப்படுத்த தயாராக வேண்டும்.
‘மாத்தி யோசி’ என்ற உத்தி ஆதிமனிதன் நெருப்பு, சக்கரம் ஆகியவற்றை கண்டறிந்த காலம் முதலே வழங்கப்பெறுவது. பெரும் கண்டுபிடிப்புகள் பலவற்றின் தூண்டல் இதிலிருந்துதான் புறப்பட்டிருக்கிறது. பொதுவாக மற்றவர்கள் வெற்றிகரமாக செய்வதைப்பார்த்து அதையே பின்தொடர்வதும், காப்பியடிப்பதும் நீண்ட காலத்துக்கு உதவாது. தனித்தன்மை காட்டுவதும், மற்றவர்களிடமிருந்து வித்தியாசம் தருவதும் வெற்றிகரமான தொழில்முனைவோர் தவிர்க்கக்கூடாதது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இப்படி ஒருவர் சாதாரண தொழிலை வித்தியாசமாக மாற்றியதில் வருமானல் அள்ளி வருகிறார். வேறொன்றுமில்லை, செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் காலக்கிரமத்தில் அதற்கான சலூன் அல்லது பராமரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காக மாற்றாக, அவர்கள் இருப்பிடம் தேடிவரும் ’பெட்ஸ் சலூன்’ மூலமாக கவனம் ஈர்த்திருக்கிறார்.
உயர் ரக செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அதற்கு செலவிடவும் தயாராக இருப்பார்கள். ஆனால் அந்த செல்லப்பிராணிகள் சீர்படுத்தலுக்கு என பெட்ஸ் சலூன் செல்வது அத்தனை சாதாரண காரியமல்ல. தனி ஒருநாளை ஒதுக்கி பிரத்யேக வாகனத்தில் செல்லப்பிராணியை அழைத்துச்சென்று, பத்திரமாக திரும்ப வேண்டும். வழியில் எங்கேனும் சக விலங்குகளை அவை கண்டுவிட்டால் பிராணி உரிமையாளர் பாடு திண்டாட்டமாகி விடும்.
இவற்றைத் தவிர்க்க நடமாடும் பெட்ஸ் சலூன் பேருதவியாகிறது. லூதியனா நகரில் நடமாடும் பெட்ஸ் சலூனை ஆரம்பித்தவர், சரியான கட்டணம், முறையான சேவை மூலம் நிலையான வருமானத்தை பெற்றுவருகிறார். செல்லப்பிராணி வளர்ப்பவர்களும் மெனக்கிட்டு தங்கள் பிராணிகளை நகரின் இன்னொரு மூலையில் அமைந்திருக்கும் பெட்ஸ் சலூனுக்கு அழைத்துச் செல்வதற்கு பதில், வசிப்பிடம் தேடி வரும் நடமாடும் சலூனை அதிகம் விரும்புகின்றனர்.
லூதியானாவின் நடமாடும் பெட்ஸ் சலூன், இளஞ்சிவப்பு நிற வேன் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதன் உள்ளே சென்றால் ஒரு நிலையான சலூனுக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. இதனை எதேச்சையாக கண்ட நெட்டிசன் ஒருவர் இணையத்தில் பகிர இந்த நடமாடும் பெட்ஸ் சலூன் வைரலாகி வருகிறது.
குறைந்த மூலதனத்துடன் கூடிய இந்த வணிக யோசனைக்கு அதிக மெனக்கிடல் தேவையில்லை. பழைய வேன், ஒரு பெட்ஸ் சலூனுக்கான அடிப்படை உபகரணங்கள், செல்லப்பிராணி பராமரிப்பில் கொஞ்சமேனும் அனுபவம் ஆகியவை இருப்பின் முழுமையான தொழிலை நடத்தி விடலாம். இந்த பெட்ஸ் சலூன் யோசனை இன்னமும் பரவலாக மேற்கொள்ளப்படாததில், பெரு நகரங்களில் வசிப்போர் இந்த உத்தியை பரிசீலிக்கவும் செய்யலாம்.