அங்கன்வாடி மையத்திற்கு கியாஸ் அடுப்பு:கிறிஸ்துமஸ் கேக் பணத்தில் வாங்கித் தந்த சிறுவன்!


அங்கன்வாடி மையத்திற்கு கியாஸ் அடுப்பு வாங்கித் தந்த அபினித்

கிறிஸ்துமஸ் கேக் வாங்க வேண்டிய பணத்தில், தான் படிக்கும் அங்கன்வாடி மையத்திற்கு கியாஸ் ஸ்டவ் வாங்கிக் கொடுத்த சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம்

கர்நாடகா மாவட்டம், தட்சிண கன்னடா மாவட்டம், கபாடாவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் அபினித். இவர் கபாடா தாலுகாவில் உள்ள கொடிம்பாலா கிராமத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார்.

இந்த நிலையில், அங்கன்வாடி மையத்தில் உள்ள கியாஸ் அடுப்பு பழுதானது. இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் அபினித் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் வாங்கிக் கொடுக்கும் பணத்தில் அங்கன்வாடிக்கு கியாஸ் அடுப்பு வாங்கித் தரலாம் என்று தனது தந்தையிடம் அபினித் கூறியுள்ளார்.

கியாஸ் அடுப்பு

இதையடுத்து அங்கன்வாடிக்கு சென்ற பிரகாஷ், கியாஸ் அடுப்பைப் பார்த்த போது, அது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் தனது மகனின் வேண்டுகோளை ஏற்று அங்கன்வாடி மையத்திற்கு கியாஸ் அடுப்பு ஒன்றை பிரகாஷ் வாங்கியுள்ளார். அந்த அடுப்பை தனது அங்கன்வாடி மையத்திற்கு அபினித் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் பத்மாவதி, தங்கம்மா, அபினித்தின் தாய் பிரியா மற்றும் மகள்கள் உடனிருந்தனர்.

அங்கன்வாடிக்கு கியாஸ் அடுப்பு வழங்குவது இன்றைய காலத்தில் பெரிய விஷயமில்லை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் இந்த அளவுக்குப் பங்களிக்கத் தயங்க மாட்டார்கள். ஆனால், இப்படி ஒரு பொருளை சிறு குழந்தைப் பரிசளிக்க யோசித்த விஷயத்தை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் தோன்றுவது புத்தாண்டின் புதிய நம்பிக்கை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x