தண்ணீர் வசதி தேவையில்லாத சிறுநீர் கழிப்பிடம்... இந்திய ரயில்வே புதுமை சாதனை


தண்ணீர் தேவையற்ற சிறுநீர் கழிப்பிடம்

இந்தியாவின் மேற்கு ரயில்வே நிர்வாகம், தண்ணீர் வசதி தேவையில்லாத சிறுநீர் கழிப்பிடத்தை ரயிலில் நிறுவி புதுமை சாதனை புரிந்துள்ளது.

மனிதரின் இயற்கை உபாதைகள் நடைமுறையில் இயற்கைக்கும் உபாதை தரக்கூடியவை. இந்திய கழிவறைகளில் தேவைப்படும் தண்ணீரின் அளவு, மேலை நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. பேப்பரை உபயோகிக்கும் மேற்கு நாடுகள், இந்தியர்கள் அதிக தண்ணீரை வீணடிப்பதாக பழி சொல்வார்கள்.

கழிவறை மட்டுமன்றி சிறுநீர் கழிப்பிடங்களும் தண்ணீர் தேவையை அதிகம் கோரக்கூடியவை. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அதிகப்படி தண்ணீரை விரயமாக்கும் கழிப்பிடங்கள் குறித்த ஆய்வுகள் இந்தியாவில் தொடர்ந்து வருகின்றன. இந்த வகையில் இந்திய ரயில்வே புதுமை முயற்சி ஒன்றை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது.

மேற்கு ரயில்வே

மேற்கு ரயில்வே நிர்வாகம் தனது ரயில்களின் என்ஜின் பயன்பாட்டுக்கு என, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சிறுநீர் கழிப்பிடங்களை நிர்மாணித்துள்ளது. அதாவது இந்த சிறுநீர் கழிப்பிடத்தை பயன்படுத்தினால், அதனை தூய்மை செய்ய நீரை விரயமாக்கத் தேவையில்லை.

ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தக்கூடிய வகையில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சிறுநீர் கழிப்பிடங்கள் அறவே தண்ணீரை கோராது. கிருமி நாசினி மற்றும் சுகாதார தேவைக்கு இதனுடன் இணைக்கப்பட்ட அல்ட்ரா வயலெட் உபகரணத்தை இயக்கினால் போதும். சிறுநீர் கழிப்பிடத்தின் மொத்த அமைப்பும் நீரை ஒட்டாது விரட்டும் தன்மையை கொண்டிருக்கும்.

தண்ணீர் தேவையற்ற சிறுநீர் கழிப்பிடம்

நீரோட்டம் ஒரே திசையில் சென்று சேர வசதியாக உள்ளே சிலிக்கானும் பொருத்தப்பட்டுள்ளது.ரயில்களை செலுத்தும் லோகோ பைலட்களின் அவசரத் தேவைக்காக கதவுடன் கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் அவசியமின்றி சூழலுக்கு நன்மை சேர்ப்பதோடு, சுகாதாரத்துக்கும் முன்னுரிமை தரும் வகையில் இவை செயல்படும்.

இந்த தண்ணீர் இல்லாத சிறுநீர் கழிப்பிடங்களின் வெற்றிகரமான பயன்பாட்டினை அடுத்து, அவற்றை பயணிகள் தேவைக்கும் பொருத்த மேற்கு ரயில்வே ஆலோசித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!

அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!

x