வீட்டின் வரவேற்பறையில் சாதாரணமாக அமரக்கூடிய சோபாவை சாலையில் ஓடும் வாகனமாக மாற்றியுள்ள இளைஞர்கள் குறித்து ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 1 கோடியே 4 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார். அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்வார். இவரது அந்த பதிவுகள் உடனடியாக வைரலாகி பல லட்சம் பேரை சென்றடைகிறது.
வழக்கமான விஷயங்களை பகிர்வதைவிட வித்தியாசமான அல்லது புதிய சாதனைகளை குறித்து அவர் அதிகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார். அதனால் இவரது வீடியோக்களுக்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்விட்களில் காணமுடியும். தனித் திறமை மிக்கவர்களை வெளிப்படையாக அவர் பாராட்டுவதற்கு தயங்குவதில்லை.
அந்த வகையில், திறமையான இரு இளைஞர்கள் குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு பாராட்டியுள்ளார். அந்த இரண்டு இளைஞர்களும் ஒரு சாதாரண சோபாவை மக்கள் எளிதில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வாகனமாக மாற்றியுள்ளனர். வீட்டில் அமரப் பயன்படும் சோவை ஒரு அருமையான வாகனமாக அவர்கள் மாற்றி உள்ளனர்.
இரண்டு தனித்தனி சோபாக்கள் ஒன்றாக்கப்பட்டு அதில் மோட்டார் பொருத்தி சோபாவில் அமர்ந்தவாறு கைகளின் மூலம் அந்த வாகனத்தை இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர் சாலையில் சாதாரண கார்களை போல வேகத்துடனும், சொகுசாகவும் அந்த சோபா ஓடுவதைக் கண்டு அனைவருமே அதிசயிக்கின்றனர்.
சாலையில் ஓடும் அந்த சோபாவின் கிளிப்பை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர்கள் குறித்து மனம் விட்டு வெகுவாக பாராட்டியுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.