விஜயகாந்த் இறந்த நாளில் மீட்கப்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைக்கு குழந்தைகள் நலத்துறையினர் விஜயகாந்தின் நினைவாக பெயர் சூட்டியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தேமுதிக நிறுவனரும்,நடிகருமான கேப்டன் விஜயகாந்த் 28-ம் தேதி உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் சாதாரண அடித்தட்டு பொதுமக்கள் வரையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் திரண்டனர்.
தேமுதிக தொண்டர்கள் பலரும் தங்களால் இயன்ற வகையில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினர். சிலர் மொட்டை அடித்தும் சிலர் அவரது உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டு போய் அடக்கம் செய்தும் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் குழந்தைகள் நலத் துறையினர் செய்த செயல் ஒன்றும் விஜயகாந்த்துக்கு வித்தியாசமான அஞ்சலியாக மாறியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி அருகே பச்சிளம் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் உடனடியாக அதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தனர். தற்போது குழந்தை பாதுகாப்பாக உள்ளது. அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என காப்பக நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் நலத் துறையினர் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் இறந்த நாளில் குழந்தையை கண்டெடுத்ததால் அவர் நினைவாக குழந்தைக்கு பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.
கண்டெடுக்கப்பட்ட குழந்தை பெண் குழந்தை என்பதால் அதற்கு விஜயகாந்த் பெயரின் முதல் பாதியான "விஜயா" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்களை ரொம்பவே உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.