இணைய உலாவலில் பயனர் பிரைவேட் பயன்பாட்டில் இருந்தபோதும், அவரது தனிப்பட்ட தகவல்களை உருவியதாக கூகுளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றத்துக்கு வெளியே ரூ41 ஆயிரம் கோடி செட்டில் செய்து வழக்கை முடிக்க முன்வந்துள்ளது கூகுள்.
கூகுள் தளத்தில் ’இன்காக்னிடோ மோட்’ என்பது, பயனருக்காக கூகுள் ஏற்ப்பாடு செய்திருக்கும் தனிப்பட்ட உலாவல் வசதியாகும். ஒருவரது தேடல் மற்றும் பகிர்வுகள் ஆகியவற்றை கூகுள் கையாளாதிருக்க, அறிமுகப்படுத்தப்பட்ட வசதியே இன்காக்னிடோ. இதன் மூலம் பயனரின் உலாவல் வரலாற்றை தங்களாலும் கண்காணிக்க முடியாது என்றது கூகுள்.
ஆனால் நடைமுறயில், இந்த உத்திரவாதத்தை கூகுள் பின்பற்றவில்லை. இன்காக்னிட்டோ மோடில் பணியாற்றிய மோதும், பயனரின் தனிப்பட்ட தகவல்களை திட்டமிட்டு திரட்டியதாக கூகுள் நிறுவனத்துக்கு எதிராக பயனர்கள் தரப்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். வாதங்களை கேட்டறிந்ததில் கலிபோர்னியா நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்தது. கூகுள் காற்றில் பறக்கவிட்ட தனியுரிமைக் கொள்கைகள் பலதும் நீதிமன்றத்தில் விவாதப் பொருளானது.
இணையத்தில் இலவசமாக வழங்கப்படும் சேவைகள் அனைத்திலும் பயனர் தனது தனியுரிமையை விலையாக கொடுக்கிறார். அவரது விவரங்களை முதலீடாக்கி, விளம்பரங்கள் மூலம் இணைய உலாவிகள் முதல் சமூக ஊடகங்கள் வரை கல்லா கட்டுகின்றன. இதற்காக குக்கீஸ், பிரத்யேக செயலிகள் உட்பட பலவற்றையும் இணைய உலாவிகள் பயன்படுத்துகின்றன. ஆனால் இதுபோன்ற எந்த தொந்தரவும் இல்லாதது என உத்திரவாதம் வழங்கப்பட்ட இன்காக்னிட்டோ மோடிலும், கூகுள் முறைகேடாக தகவல்களை சேகரித்தது நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.
2020-இல் இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில், கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் போக்கில் மில்லியன் கணக்கான பயனர்களை கூகுள் பதம் பார்த்து வந்தது அம்பலமானதும் அல்பாபெட் சுதாரித்தது. கலிபோர்னியா மாகாணத்தின் தனியுரிமைச் சட்டங்களை மீறியது உட்பட இதர சட்ட முறைகேடுகள் தொடர்பான வழக்கை முடித்துக்கொள்ள, நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண கூகுள் முயன்றது. அதன்படி நீதிமன்றத்தின் படியேறிய பயனர்களுக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 ஆயிரம் கோடியாகும்.