5ஜி செலவினம் காரணமாக தள்ளாட்டத்தில் தவித்து வரும் ஜியோ, ஏர்டெல் ஆகியவை கட்டண உயர்வை அறிவிக்க காத்திருக்கின்றன.
அதிகரிக்கும் செலவினங்கள் காரணமாக நாட்டின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் ஆகியவை கட்டண உயர்வை அறிவிக்க காத்திருக்கின்றன. ஆனால் இருவர் இடையே யார் முதலில் கட்டண உயர்வை அறிவிப்பது என்பதில் தயக்கம் மேலிட்டிருக்கிறது.
சந்தை அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம். மலிவான கட்டணத்தில் 4ஜி சேவைகளை வழங்குவதில் அறிமுகமான ஜியோ, கட்டண உயர்வை அறிவிப்பதில் தயங்கி வருகிறது. இதனால் முதலில் ஏர்டெல் அறிவிக்கப்படும் என ஜியோ காத்திருக்கிறது.
இந்த இரு முன்னணி நிறுவனங்கள் இடையே கட்டண உயர்வுக்கான நெருக்கடி ஜியோவிடம் அதிகம் காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், 5ஜி தொடர்பான செலவினங்கள். அலைக்கற்றையை அள்ளி சுருட்டியது முதல், 5ஜி வசதிக்கான செல்போன் கோபுரங்களை நிறுவுவது வரை ஏகப்பட்ட செலவினங்களால் ஏற்கனவே ஜியோ கடும் அழுத்தத்தில் தவித்து வருகிறது.
5ஜி வசதி அமலானதுமே அதற்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கும் என ஜியோ எதிர்பார்த்தது. ஆனால், 4ஜி வசதியே போதும் என பெரும்பாலான வாடிக்கையாளர்கள் திருப்தி காட்டியதில் ஜியோ ஏமாற்றமடைந்தது. இதன் பின்னணியில் 4ஜி வேகமே வாடிக்கையாளர்களை திருப்தி செய்யாதது, 5ஜி வேகத்துக்கான தேவை எல்லோரிடமும் இல்லாதது போன்றவை காரணமானது. இதற்கிடையே 5ஜி செலவினங்களை சமாளிக்கும் வகையில் கட்டண உயர்வை நடைமுறைத்தாவிடில் ஜியோ நிர்வாகம் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் எழுந்துள்ளது.
5ஜி-க்கு முன்பாகவே கட்டண உயர்வினை ஏர்டெல் பரிசீலித்து வந்தது. ஆனால் ஜியோவின் போட்டி காரணமாக கட்டண உயர்வினை அறிவிக்க ஏர்டெல் தயங்கி வந்தது. இந்த வகையில் ஜியோ, ஏர்டெல் இரண்டுமே, கட்டண உயர்வின் சந்தை பாதகங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றன. ஒப்பீட்டளவில் ஏர்டெல்லை விட ஜியோவுக்கான நெருக்கடிகள் கூடி வருகின்றன. ஆனபோதும் ஏர்டெல் முதலில் அறிவிக்கப்பட்டும் என ஜியோ காத்திருக்கிறது.
முன்னதாக கடந்தாண்டு நவம்பரில், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சுமார் 20% கட்டண உயர்வினை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்திருந்தன. 2023-ம் ஆண்டினை பல்கடித்து போக்கிவிட்ட இந்த நிறுவனங்கள், வேறு வழியின்றி 2024-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே கட்டண உயர்வை அறிவிக்கத் துடிக்கின்றன.
சந்தையில் இருக்கும் மூன்றாவது நிறுவனமான வோடோபோன் ஐடியா, ஏற்கனவே கடன் காரணமாக மூழ்கும் கப்பலாக தவித்து வருகிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு முன்வந்தால், அவை இரண்டையும் விட வோடாபோன் நிறுவனமே பெருமகிழ்ச்சி கொள்ளும். ஆனால் பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவது என்ற தவிப்பில் இந்த நிறுவனங்கள் ஆழ்ந்துள்ளன.
இதன் மறுபக்கமாக, புத்தாண்டில் இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு அறிவிப்பும் காத்திருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...