‘பாலியல் டீப் ஃபேக் வீடியோக்களை உருவாக்குவது கிரிமினல் குற்றம்’ சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது இங்கிலாந்து


இணையத்தில் உலவும் டீப் ஃபேக் மோசடிகள்

பாலியல் டீப் ஃபேக் வீடியோக்கள் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ள சூழலில் அவற்றுக்கு எதிராக சாட்டையை சொடுக்கியுள்ளது இங்கிலாந்து.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான அறிவியல் வளர்ச்சிகளில் உலகம் முன்னேறி வருகிறது. இதன் மறுபக்கத்தில் அதே செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்தி, டீப் ஃபேக் பெயரில் போலியான பாலியல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் இழிவான போக்கும் அதிகரித்து வருகிறது. எனவே உலக நாடுகள் தங்களது சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக, டீப் ஃபேக் குற்றங்களை தடுக்க முயன்று வருகின்றன.

டீப் ஃபேக்

அவற்றில் இங்கிலாந்து முன்னோடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி வரவிருக்கும் புதிய சட்டத்திருத்தம், ஒருவரின் அனுமதியின்றி அவரது டீப் ஃபேக்குகளை உருவாக்குவது மற்றும் பகிர்வதை கிரிமினல் குற்றமாக்குகிறது. டீஃபேக் படங்களை உருவாக்குவோர் அதனை பகிராவிடிலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையாக வழக்கு பாயும். டீப் ஃபேக் பகிர்வு உறுதி செய்யப்பட்டால் அவர்களை வரவேற்க சிறைச்சாலை தயாராகும்.

தற்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குற்றவியல் நீதி மசோதாவில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வரும். இங்கிலாந்து அமைச்சரான லாரா ஃபாரிஸ், "டீப் ஃபேக்குகளை உருவாக்குவது ஒழுக்கக்கேடானது. பெரும்பாலும் பெண்களை குறைவைத்து நடத்தப்படும் இவை குற்றம் என்று புதிய சட்டத்திருத்தம் தெளிவான செய்தியை உலகுக்கு அனுப்பும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இந்தச் சட்டம் இங்கிலாந்தில் இணைய பாலியல் சுரண்டலுக்கு எதிரான சட்டப் பாதுகாப்பின் நோக்கத்தை விரிவுபடுத்த முயல்கிறது. இனி ஒருவரது சம்மதமின்றி அவரது டீப்ஃபேக்குகளை பகிர்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். முதல் முறை குற்றவாளிகள் எனினும் அவர்களுக்கு சிறைத் தண்டனை உறுதியாகும். இது உட்பட நவீன தொழில்நுட்பத்தின் துஷ்பிரயேகங்களுக்கு எதிரான உலகளாவிய கவலைகளுக்கு விடை தரும் வகையிலும் இங்கிலாந்தின் முயற்சி அடையாளம் காணப்படுகிறது.

இந்தியாவை கலக்கிய ராஷ்மிகா டீப் ஃபேக் வீடியோ

"டீப் ஃபேக்கின் நோக்கம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானம் அல்லது துன்பத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே அவை கடுமையாகக் கையாளப்பட வேண்டும் என்பதை புதிய சட்டத் திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது" என்று லாரா ஃபாரிஸ் தெரிவித்தார். இதர தேசங்களைப் போன்று டீப் ஃபேக் பாதிப்பின் அதிகாரப் பரவலைக் குறைத்து மதிப்பிடவும் இங்கிலாந்து தயாராக இல்லை.

ஏனெனில் டீப் ஃபேக் பலதரப்பினரை, குறிப்பாக சாமானியர்களை பெரிதும் சாய்ப்பதாக அடையாளம் கண்டுள்ளனர். சேனல் 4 நியூஸ் ஆய்வின்படி, கடந்த மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட ஐந்து டீப்ஃபேக் வலைத்தளங்களின் பகுப்பாய்வு, இந்த இணையதளங்கள் கிட்டத்தட்ட 4000 பிரபலமான நபர்களின் ஆபாச டீப் ஃபேக்குகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தது.

"டீப் ஃபேக் அத்துமீறல்களை அப்படியே விடுவது, காலக்கிரமத்தில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பாகும் என்பதை அறிந்துள்ளோம். எந்த வகையிலும் அதனை இங்கிலாந்து அரசாங்கம் அதை பொறுத்துக்கொள்ளாது" என்று அமைச்சர் லாரா ஃபாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

x