தூத்துக்குடியில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிப்பு


தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் தேசிய மீன் மரபணு வள நிறுவன விஞ்ஞானிகள் முக்கிய மீன்பிடி துறைமுகங்களை அவ்வப்போது நேரில் பார்வையிட்டு, அங்குள்ள மீன் இனங்கள் குறித்து ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு தேசிய மீன் மரபணு வள நிறுவனத்தை சேர்ந்த பி.கோடீஸ்வரன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, பெரிய மீன்கள் தனியாக விற்பனைக்காக பிரித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் வித்தியாசமான நிறத்துடன் விலாங்கு மீன்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதில் 2 பெண் விலாங்கு மீன்கள் இருந்தன. இந்த மீன்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக கொண்டு சென்றனர்.

தொடர்ந்து அதனை ஆய்வு செய்த போது, ஏற்கனவே உள்ள விலாங்கு மீன்களில் இருந்து, இந்த விலாங்கு மீன் வித்தியாசப்படுவதை கண்டறிந்தனர். அதன்படி இந்தியாவில் ஏற்கனவே உள்ள மீன்களின் முதுகு தண்டுவடத்தில் 150 எலும்புகள் வரை மட்டுமே இருக்கும்.

ஆனால் இந்த மீனில் 161 முதல் 163 எலும்புகள் வரை இருந்தன. தலை, உடல் மற்றும் நிறத்திலும் வித்தியாசம் காணப்பட்டது. உடலில் வெளிர்பழுப்பு முதுகு, வெள்ளி வெள்ளை நிற வயிறு பகுதியும், முன்தோல் இருண்டதாகவும், துடுப்பு சிவப்பு நிறமாகவும், அடிப்பகுதியில் கரும்புள்ளியும் காணப்பட்டது.

தொடர்ந்து மரபணு பரிசோதனை மேற்கொண்ட போது, இந்த வகை மீன்கள் இதுவரை கண்டறியப்படாத புதிய வகை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்சே (Ariosoma Thoothukudiense) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட பி.கோடீஸ்வரன் கூறுகையில், “இந்த விலாங்கு மீன்கள் இதுவரை கண்டறியப்படாத புதிய வகை ஆகும். இந்த வகை மீன்கள் சுமார் 60 மீட்டர் ஆழம் கொண்ட பகுதியில் வசிக்க கூடியவை. இவை பாறை இடுக்குகளில் வசிக்க கூடியவை. இரவு நேரங்களில் வெளியில் வந்து சிறிய மீன்கள், இறால்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி சாப்பிடுகின்றன.

பொதுவாக விலாங்கு மீன்களை வெளிநாடுகளில் சாப்பிடுகின்றனர். தற்போது, புதிதாக கண்டறியப்பட்ட விலாங்கு மீன்கள் சாப்பிட உகந்ததா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த மீனில் உள்ள புரதச்சத்து மற்றும் என்னென்ன சத்துக்கள் உள்ளன, மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.