புயல் அடிக்கும், பெரும் மழை பெய்யும்... புதுக்கோட்டை மாவட்டத்தில் வேகமாக பரவும் வதந்தி!


புதுக்கோட்டை

எதிர்வரும் 27 மற்றும் 28 ம் தேதிகளில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்ததுபோல பெருமழை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்ய இருப்பதாக போலியான செய்தி ஒன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. அனைத்து வாட்ஸ் அப் குழுக்களிலும் இதனை பரப்பி வருவதால் அம்மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பெருமழை வெள்ளம்

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அது போலியான செய்தி அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 21.12.2023 அன்று ஒரு நபர் வாட்ஸ்அப் வழியாக எதிர்வரும் 27.12.2023 மற்றும் 28.12.2023 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிக மழை பெய்யும் எனவும், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார். ஆனால் வானிலை எச்சரிக்கை மையத்திலிருந்து அவ்வாறான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இவ்வாறு அதிகாரபூர்வமில்லாத தகவலை எண்ணி பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. ஏதேனும் வானிலை எச்சரிக்கை வரப்பெற்றால் உடனடியாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் வதந்தி பரவிய அளவுக்கு இந்த உண்மைத் தகவல் மக்களிடம் சென்று சேரவில்லை. அதனால் இன்னும் அங்கு புயல், மழை, வெள்ளம் குறித்தான பயம் அகலவில்லை.

x