விபத்து பகுதியாக மாறும் மதுரை வண்டியூர் விலக்கு: போலீஸ் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


மதுரை வண்டியூர் விலக்கு பகுதியில் கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகி சேதமடைந்த அரசு பேருந்து.

மதுரை: மதுரை வண்டியூர் விலக்கு பகுதியில் விபத்துகளை கட்டுப் படுத்த போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை பாண்டி கோயில் சுற்றுச்சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இச்சாலையில் பாண்டி கோயில் சந்திப்பிலிருந்து விரகனூர் ரவுண்டானாவுக்கு செல்லும் வழியில் உள்ள வண்டியூர் விலக்கு பகுதி, நான்குமுனை சந்திப்பாக உள்ளது. இப்பகுதியை ஆயிரக் கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. குறிப்பாக காலை, மாலை நேரத்தில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர். பள்ளி வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.

ஆனால், சுற்றுச்சாலையின் இப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக கடந்து செல்ல முயற்சிக்கின்றன. இதனால் சாலையை கடந்து செல்ல முடியாமல் வண்டியூர் பகுதியிலிருந்தும், குவாரி ரோடு பகுதியிலிருந்தும் வரும் வாகனங்கள் சிரமப்படுகின்றன. நான்குவழிச் சாலை என்பதால் அந்த இடத்தில் வேகத் தடை ஏற்படுத்தப்படாமல், இரு திசை யிலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த இரும்பு தடுப்புகளை போக்குவரத்து போலீஸார் வைத்துள்ளனர்.

அந்த தடுப்புகளை சுற்றுச்சாலையில் வரும் வாகன ஓட்டுநர்கள் கவனிக்க தவறினால் விபத்தில் சிக்குகின்றனர். கன்டெய்னர் போன்ற பெரிய வாகனங்கள் வேகத் தடுப்புகள் இடையே மிகவும் சிரமப்பட்டு வளைந்து செல்கின்றன. அண்மையில் சுற்றுச்சாலையில் வந்த கன்டெய்னர் லாரி, வண்டியூர் விலக்கு பகுதியை நெருங்கிய போது இரும்பு தடுப்புகளிடையே வளைந்து செல்ல முடியாமல் திணறி நின்றது.

அந்த நேரத்தில் செங்கோட்டையிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, கன்டெய்னர் லாரியின் பின் புறத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. ஓட்டுநரும், பயணிகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது போன்று இப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியில் புறக்காவல் நிலையம் இருந்தும் விபத்துகளை தடுக்க முடியவில்லை. அங்கிருக்கும் போலீஸார் வாகன தணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். வண்டியூர் விலக்கு பகுதியில் உள்ள நான்குமுனை சந்திப்பில் விபத்துகளை தடுக்க, அங்கு சிறிய அளவில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இச்சந்திப்பு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.