கர்நாடகா தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பு - ‘ஓசூர் பகுதியில் 8,000 ஏக்கர் விளை நிலம் பாதிப்பு’


சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பு காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் நுரை பொங்க வெளியேறி வருகிறது.

ஓசூர்: கர்நாடக மாநில தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால், ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர் பாசன பகுதியில் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 430 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து செல்கிறது. கர்நாடக மாநிலத்தில் 112 கிமீ தூரமும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ தூரமும், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 140 கிமீ தூரமும் சென்று இறுதியாகக் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கழிவுநீரால் மாசு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, இவ்விரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக கர்நாடகா மாநில தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் குடியிருப்பு பகுதி சாக்கடை நீர் தென்பெண்ணை ஆற்றில் நேரடியாகக் கலக்கிறது. இதனால், கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைந்துள்ளது.

மழைநீருடன் கலப்பு: இதனிடையே, கடந்த மாதத்தில் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து குறைந்த நிலையில், அண்மையில் பெய்த மழைக்கு ஆற்றில் நீர்வரத் தொடங்கியுள்ள நிலையில், கர்நாடக மாநில தென்பெண்ணை பகுதியில் தேங்கிய கழிவுநீர் மழை நீருடன் வருவதால், ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர் நுரை பொங்கத் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைந்து 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கால்நடைகள் பாதிப்பு: இது தொடர்பாக சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி ரெட்டி கூறும்போது, “ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைந்து இதன் மூலம் பாசன வசதி பெறும் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்நீரை பயன்படுத்தும் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆற்றில் கழிவுநீர் கலப்பதை அரசு தடுக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக நீர்வளத்துறையினர் கூறியதாவது: பெங்களூரு பகுதியிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் கழிவு நீரை முழுமையான சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடந்த 2020 நவம்பர் 11-ல் சென்னை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தற்போது, கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கெலவரப்பள்ளி அணை நீரை மீண்டும் ஆய்வு செய்ய வருவதாகக் கூறி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.