2,500 கடன் செயலிகள்... கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து களையெடுப்பு


மோசடி கடன் செயலிகள்

கூகுள் ப்ளே ஸ்டோர் வாயிலாக செயல்பாட்டில் இருந்த மோசடியான 2,500 கடன் செயலிகள், அதிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடன் செயலிகள் என்ற பெயரில் புற்றீசலாய் முளைத்த மோசடி செயலிகள், அப்பாவி மக்களை கடன் வலையில் வீழ்த்தி அலைக்கழித்து வந்தன. கந்துவட்டிக்கு நிகரான வட்டி விகிதத்தை வழங்கி வந்ததோடு, தவணை தவறுவோர் மீது அநியாய அபராதங்களை விதித்தன. மேலும், செல்போனுக்குள் ஊடுருவி பயனரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கான்டாக்ட் லிஸ்ட் போன்றவற்றையும் களவாடிக் கொண்டன.

கூகுள் ப்ளே

பின்னர் தவணை தவறியதாக கூறி, ஆபாச மிரட்டலை அரங்கேற்றின. செல்போனில் இருந்து திருடிய தரவுகளை வைத்து மார்பிங் புகைப்படங்களை உருவாக்கி கான்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் அனுப்புவது உள்ளிட்ட அக்கிரமங்களையும் நிகழ்த்தி வந்தன. காவல்துறையில் புகார் அளித்தபோதும், வட இந்தியாவின் ஏதோவொரு மூலையிலிருந்து செயல்படும் அந்த மோசடியாளர்களை அடையாளம் காண்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை.

இதனால் சிறுதொகையை கடனாகப் பெற்றவர்கள், பெரும் அபராதம் மற்றும் அநியாய வட்டிக்கு பெரும் தொகையை இழந்தனர். மேலும் அவமானத்துக்கு ஆளானதோடு, தொடர் மிரட்டல்களால் நிம்மதி இழந்தனர். இந்த கடன் செயலிகளின் பின்னணியில் சீன நிறுவனங்கள் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து மத்திய அரசு சுதாரித்தது. சூதாட்ட செயலிகளின் வரிசையில், மோசடி கடன் செயலிகளும் சாமானியர்களை துன்புறுத்தி வருவதை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கையில் இறங்கியது.

இதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் இதர ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டது. நிதி ஸ்திரமின்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டங்களில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. கண்காணிப்பு நடைமுறைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. ரிசர்வ் வங்கி அங்கீகரித்த சட்டபூர்வ கடன் செயலிகளின் பட்டியலை கூகுள் நிறுவனத்திடம் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பகிர்ந்து கொண்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்த சரிபார்ப்புகளின் அடிப்படையில் 2021 ஏபரல் முதல் 2022 ஜூலை வரையிலான காலத்தில் சுமார் 4 ஆயிரம் செயலிகளை கூகுள் நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் மோசடி செயலிகளாக அடையாளம் காணப்பட்ட 2,500 கடன் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டன. தற்போது புழக்கத்தில் இருக்கும் கடன் செயலிகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த தகவல்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்துள்ளார்.

x