மொத்தமாக 12,000 ஊழியர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது மிகவும் கடினமான முடிவு என்றும், அதேசமயம் இந்த பணிநீக்கத்தை நிறுவனம் வேறு மாதிரியாக சமாளித்திருக்கலாம் என்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மிகக் கடினமான முடிவை கூகுள் நிறுவனம் எடுத்திருந்தது. கூகுள் நிறுவனத்தில் இருந்து சுமார் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அது நடந்து தற்போது ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. இது கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும். இந்நிலையில், தற்போது இந்த மிகப் பெரிய ஆட்குறைப்பு குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பல நிறுவனங்கள் கோவிட் மற்றும் அதன் பிறகான காலகட்டத்தில் ஊழியர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்தன. எலான் மஸ்க் ட்விட்டரில் தொடங்கி வைத்த ஆட்குறைப்பு நடவடிக்கை, டெக் நிறுவனங்கள் முதல் ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் வரை நீண்டது.
இதனைத் தொடர்ந்து 2022 காலகட்டத்தில் கூகுளில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், 'ஆல் ஹேண்ட்ஸ் மீட்டிங்'கில் கலந்து கொண்ட அந்த நிறுவனத்தில் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் ஊழியர் ஒருவர், `பணியாளர்களைக் குறைக்கும் கடினமான முடிவை எடுத்துக் கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது. இந்த முடிவு நிறுவனத்தின் லாப, நஷ்டம் மற்றும் உறுதியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?' என்று கேள்வி எழுப்பினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் நிச்சயமற்ற தன்மைக்கு எழுப்பப்பட்ட இந்தக் கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, 'நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைகளை கூகுள் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். எந்தவொரு நிறுவனத்திற்கும் பணிநீக்கம் செய்வது என்பது கடினமான சூழல். கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு தருணத்தை நாங்கள் எதிர்கொள்ளவில்லை.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணிக் கணக்குகளுக்கான அணுகலை உடனடியாகத் துண்டித்தது மிகக் கடினமான முடிவு. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், நாங்கள் செயல்படவில்லை என்றால், அது ஒரு மோசமான முடிவாக இருக்கும் என்பது தெளிவானது” என்று கூறியுள்ளார்.