பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களை விற்பது உள்ளிட்ட பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பலவகையான கட்டணங்கள் மற்றும் கமிஷன் வாயிலாக நிதி அமைச்சகத்திடம் இருந்து ரூ10.68 கோடி பெற்றுள்ளதாக இன்று வெளியான ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் பரிவர்த்தனையில், தனது வங்கிக் கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான வவுச்சர்களை, 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் பெற்றுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை 30 கட்டங்களாக அவற்றின் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளன. 2018 மற்றும் 2024-க்கு இடையில், கமிஷன் மற்றும் கட்டணங்கள் இந்த 30 கட்டங்களிலும் எஸ்பிஐ வங்கியால் முறைப்படி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக நிதி அமைச்சகத்திற்கு வங்கி தொடர்ந்து நினைவூட்டல்களை அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
தேர்தல் பத்திரங்களின் இந்த 30 கட்ட விற்பனைகளில், ஒன்பதாம் கட்டத்தின்போது போது அதிக அளவு கமிஷன் பெறப்பட்டுள்ளது. இது 2019 மக்களவை தேர்தலுக்கு சற்று முன்பு நடந்தது என்றும் இந்த கட்டத்தில் மொத்தம் 4,607 பத்திரங்கள் விற்கப்பட்டன எனவும் தெரிய வந்துள்ளது. இவற்றின் மூலம் மட்டுமே ரூ1.25 கோடி கமிஷனாக எஸ்பிஐ பெற்றுள்ளது. இவற்றில் மிகக்குறைந்த கட்டணமாக, நான்காவது கட்டமாக நடைபெற்ற 82 தேர்தல் பத்திரங்கள் பரிவர்த்தனையின் போது மிகக் குறைந்த கட்டணமாக ரூ1.82 லட்சம் வசூலிக்கப்பட்டது.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் பத்திரங்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக எஸ்பிஐ மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. எஸ்பிஐ கணிப்பின்படியே தேர்தல் பத்திரங்களின் பரிவர்த்தனைகள் அப்போது புதிய உச்சம் தொட்டன.
தேர்தல் ஆணையம் அண்மையில் வழங்கிய தரவுகளின்படி , ரூ12145.87 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளால் பெறப்பட்டுள்ளன. இதில் பாஜகவின் பங்கு மட்டுமே ரூ.6,000 கோடிக்கும் மேலாக சென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக இந்திய தேசிய காங்கிரஸ் சுமார் ரூ.1,351 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ1,592 கோடியும் பெற்றது தெரிய வந்துள்ளது.