பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. தேர்தல் நெருங்குவதை அடுத்து பாகிஸ்தான் அரசு அதிரடி


பெட்ரோல்

கடும் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை குறைத்து பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் தேசம் கடுமையான பொருளாதார மந்த நிலைக்கு ஆளாகியுள்ளது. அறிவிக்கப்படாத திவால் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா, வளைகுடா தேசங்கள் உள்ளிட்ட தனது வழக்கமான புரவலர்களிடம் கையேந்தி உள்ளது. நிதி தட்டுப்பாடு காரணமாக தனது ஆயுதக் கருவூலத்திலிருந்து பெருமளவு போர்த் தளவாடங்களை உக்ரைனுக்கு விற்றது.

பெட்ரோல் பங்க்

அண்டை தேசமான இந்தியாவுடன் கடும் உரசல் போக்கை கடைபிடித்து வரும் பாகிஸ்தானின் பிறவிக் குணத்திலும் மாற்றம் தென்பட்டிருக்கிறது. சீனாவை விட்டுத்தராதும், இந்தியாவுடன் சிநேகம் பாராட்டவும் பாகிஸ்தான் தலைப்பட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமான கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில், தற்போது பெட்ரோலிய எரிபொருட்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி தொடங்கியதுமே எரிபொருட்களின் விலையை அடுத்தடுத்து உயர்த்தி குடிமக்களை கடுமையாக பாகிஸ்தான் நோகடித்தது. வாகனம் வைத்திருப்பவர்களை பொதுப்போக்குவரத்துக்கு, பெட்ரோல் விலை உயர்வு உந்தித்தள்ளியது. எரிபொருட்களின் அதிரடி விலை உயர்வு, சந்தையில் எதிரொலித்ததில் ஒட்டிமொத்த விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்துக்கும் வழிவகுத்தது.

பாகிஸ்தானில் ஒரு பெட்ரோல் பங்க்

இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசலில் விலைக்குறைப்பை பாகிஸ்தான் அறிவித்திருப்பது அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ14 குறைந்து ரூ.267க்கும், ஸ்பீடு டீசல் விலை லிட்டருக்கு ரூ13.50 குறைந்து ரூ.276க்கும் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட இதர எரிபொருட்களின் விலைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவது, அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது உள்ளிட்டவை காரணமக சொல்லப்பட்டாலும், அடுத்தாண்டில் திட்டமிடப்பட்டுள்ள தேர்தலே முக்கிய காரணமாக தெரிய வருகிறது. பொருளாதார நெருக்கடியின் மத்தியிலிருக்கும் பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும்போது, அதே போன்ற தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் இந்தியாவிலும் எரிபொருள் விலைகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

x