சாம்சங் செல்போன் வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கும் ஆபத்து; மத்திய அரசு புதிய எச்சரிக்கை


ஐபோன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வரிசை செல்போன்களைத் தொடர்ந்து, பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து குறித்து மத்திய அரசு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)), இணைய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அவ்வப்போது குடிமக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி போன்களை பயன்படுத்துபவர்களை குறிவைத்து கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு இருந்தது.

சாம்சங்

அதன்படி சாம்சங் செல்போன்களின் கேலக்ஸி வரிசையில் 11, 12, 13 மற்றும் 14-ல் உள்ள அபாயங்கள் குறித்து விவரிக்கப்பட்டிருந்தன. தங்களது செல்போனை ஹேக்கர்கள் பிடியிலிருந்து பாதுக்காக்க, ஓஎஸ் அப்டேட் உள்ளிட்ட அத்தியாவசிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் பயனருக்கு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட இதர ஸ்மார்ட் சாதனங்களுக்குமான எச்சரிக்கையை இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் தொடர்ச்சியாக ஹேக்கர்களின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகின்றன. இவ்வாறு தாக்குதல் நடத்துவோரின் நோக்கம், ஆப்பிள் சாதனத்தின் முக்கியமான தகவல்களை திருடுவது, தன்னிச்சையாக குறியீட்டை இயக்க முயல்வது, பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உடைத்து தொடர் ஊடுருவலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது, சேவை முடக்கத்தை ஏற்படுத்துதல், பயனர் தனது சாதனத்தை இயக்குவதற்கான அங்கீகாரத்தை இழக்கச் செய்தல், ஒட்டுமொத்தமாக ஆப்பிள் சாதனத்தை ஹேக்கர் கட்டுப்பாட்டில் அடக்குவது உள்ளிட்டவையாக இருக்கின்றன.

ஹேக்கர்

பாதிப்புக்குரிய ஆப்பிள் தயாரிப்புகளாக ஐஓஎஸ், ஐபேட்எஸ், மேக்ஓஎஸ், டிவிஓஎஸ், வாட்ச்ஓஎஸ் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. அதாவது ஐபோன் மட்டுமன்றி ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள், டிவிக்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவையும் ஹேக்கர்களின் இலக்கிற்கு எளிதில் இரையாகின்றன. இந்த வரிசையில் சஃபாரி பிரவுசரையும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு உள்ளடக்கி உள்ளது. எனவே ஆப்பிள் நிறுவனம் வழங்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி தங்கள் சாதனங்களையும், அதிலுள்ள தரவுகளையும் பாதுகாத்துக்கொள்ளுமாறு ஆப்பிள் பயனர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x