கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்றதற்காக பாதுகாப்பு வீரரால் சங்கடத்துக்கு ஆளான ஷர்மிளா ராஜசேகர் என்ற பெண்ணை முன்வைத்து இணையம் இரண்டு நாளாக ரெண்டுபட்டது.
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் தனக்கு இந்தி தெரியாது என்று விளக்கியும், பணியிலிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர், ’இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும், இந்தியர்கள் அதனை கற்றுக்கொள்வது அவசியம்’ எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பான வாக்குவாதத்தில் சங்கடத்துக்கு ஆளான ஷர்மிளாவுக்கு ஆதரவாக இணையவெளி போர்க்கோலம் பூண்டது. சாமானியர்கள் மட்டுமன்றி முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உட்பட பல கட்சி அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் இதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இவர்களுக்கு எதிராக கிளம்பிய பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள், ஷர்மிளா ராஜசேகர் கோவாவில் நடத்தியது நாடகம் என்றும், அவருக்கு இந்தி நன்றாகவே தெரியும் என்றும் வாதிட்டனர். அதற்கு சான்றாக ட்விட்டரில் ஷர்மிளா ராஜசேகர் என்ற பெயரிலான பெண்ணின் இந்தி பதிவுகளை பகிர்ந்தனர்.
இதனால் ஷர்மிளா விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதன் பின்னணியில் உண்மைத் தன்மையை ஆராய புறப்பட்ட சிலர், கடைசியில் இரு ஷர்மிளாக்களும் வெவ்வேறானவர்கள் என்று நிரூபித்தனர். கோவாவில் பாதிக்கப்பட்ட ஷர்மிளா ராஜசேகர் ட்விட்டரிலேயே இல்லை என்பதையும் வெளிப்படுத்தினார்கள்.
இதற்கிடையே ட்விட்டரில் ஷர்மிளா ராஜசேகர் என்ற பெயரில் இயங்கும் இன்னொரு ஷர்மிளாவிடம் சென்ற பாஜக ஆதரவாளர்கள் சிலர், அவரை ஏகடியம் செய்ய அந்த ஷர்மிளா கொதித்தெழுந்தார். பாஜக எதிர்ப்பாளரான அந்த ஷர்மிளா தனது ட்விட்டர் பக்கத்தில் வகைதொகையாக சிக்கிய பாஜக ஆதரவாளர்களை அங்கேயே பதிலடி தந்ததோடு, அந்த விவகாரத்தை ஃபேஸ்புக் வரை இழுத்து பாஜகவினரின் அவசரத்தையும், அறியாமையையும் அம்பலப்படுத்தி உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்து... வாகனத்தில் சென்றவர் காயம்!