கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3.3 லட்சம் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தவும், அவற்றில் வெளியாகும் பதிவுகளை நெறிப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி செய்திகள், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைக்கான ஆதரவு, சிறார் பாலியல் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த அரசு முயன்று வருகிறது. இதற்காக அரசு கொடுத்த நிர்ப்பந்தங்களுக்கு சமூக ஊடகங்கள் முதலில் வளையவில்லை.
தங்கள் நாட்டுச் சட்டங்களே தங்களை கட்டுப்படுத்தும் என அவை வாதிட்டன. ஆனால் இந்தியாவின் சட்டங்களுக்கு உட்படாவிடில் இங்கே அனுமதியில்லை என கிடுக்குப்பிடி போடப்பட்டதும் சமூக ஊடங்கள் இணங்கி வந்தன. இந்திய அரசின் உத்தரவுக்கு உட்பட்டு சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான சமூக ஊடக கணக்குகளை தடை செய்வது, விஷம பதிவுகளுக்கு தடை போடுவது, மக்கள் மத்தியில் சச்சரவை ஏற்படுத்தும் போலி செய்திகளை தவிர்ப்பது உள்ளிட்டவற்றில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்தன.
அவற்றில் ஒன்றாக முறைகேடான சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் அடங்கும். அந்த வகையில் அக்.26 - நவ.25 இடையிலான ஒரு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 3,33,036 கணக்குகளை முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் அரசுக்கு தெரிவித்துள்ளது. இதில் கணிசமானவை சிறார் பாலியல், பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட கணக்குகள் ஆகும். அரசு பரிந்துரைத்தது மட்டுமன்றி, சுய தணிக்கையின் பெயரிலும் ஆட்சேபகரமான கணக்குகளை ட்விட்டர் முடக்கி உள்ளது.
இதே போன்று செப் - அக் மாதங்களுக்கு இடையே மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆக - செப் இடையே சுமார் 5 லட்சம் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இந்த வகையில் சுமார் 10 லட்சம் கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது. அரசின் வழிகாட்டுதலின் பெயரிலான முடக்கத்துக்கு அப்பால், செயல்படாத மற்றும் கைவிடப்பட்ட பழைய கணக்குகளை நீக்கும் பணியையும் ட்விட்டர் நிர்வாகம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...