சென்னையில் காய்கறி விலைகள் கிடுகிடு உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!


காய்கறிகள்

தொடர் மழைக்குப் பிறகு சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், வரத்து குறைபாடு காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த 4-ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். இதனிடையே மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடித்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப துவங்கியுள்ளனர். சில இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை காய்கறிகள் விலை உயர்வு

இந்நிலையில் சென்னையில் கடந்த ஒரு வார காலமாகவே காய்கறிகளில் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சென்னைக்கு காய்கறிகள், தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவு வரும் நிலையில், அங்கும் மழை பெய்து வருவதால் வரத்து குறைந்துள்ளது. வரும் காய்கறிகளும் விலை அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவதால், சென்னையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தை

காய்கறிகளின் விலைகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் இன்று ரூ.50க்கு விற்பனையாகிறது. ரூ.20க்கு விற்ற கத்திரிக்காய் ரூ.50க்கும், அவரை ரூ.35ல் இருந்து ரூ.60ஆக விலை உயர்ந்துள்ளது.

முருங்கைக்காய் ரூ.80ல் இருந்து ரூ.130ஆகவும், முள்ளங்கி ரூ.25ல் இருந்து ரூ.40ஆகவும் விலை அதிகரித்துள்ளது. பச்சை மிளகாய் ரூ.25ல் இருந்து ரூ.40ஆக விலை உயர்ந்துள்ளது. ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த குடை மிளகாய் ரூ.60க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தையில் இன்னும் 2 வாரங்களுக்கு விலை உயர்வு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x