மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு... இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்த ஊராட்சி பணியாளர்கள்!


ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கின் உடலுக்கு ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் இறுதிச் சடங்குகள் செய்து, அடக்கம் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

குரங்கு அடக்கம் செய்யப்பட்ட இடம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தாளவாடி பேருந்து நிலையம் அருகில் மின்சார கம்பத்தில் ஏறிய குரங்கு ஒன்று எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்து, கம்பியிலேயே தொங்கிய நிலையில் காணப்பட்டது. இதைக்கண்ட தாளவாடி ஊராட்சி தூய்மைப் பணியாளர் முருகன் என்பவர் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார்.

ஊராட்சி பணியாளர் முருகன்

இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு குரங்கின் உடலை கீழே இறக்கினர். இதையடுத்து குரங்கின் உடலை எடுத்துச்சென்ற முருகன் தலைமையிலான ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் அதற்கு மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் தூவி, மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தனர்.

தாளவாடி பகுதியில் குரங்குகளை ஆஞ்சநேயரின் வடிவமாக கருதி மக்கள் வழிபட்டு வருவதால் இறந்து போன குரங்கிற்கு தெய்வ முறைப்படி மரியாதை செய்து வழிபட்டு அடக்கம் செய்ததாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். இறந்து போன குரங்கிற்கு இறுதி மரியாதை செய்த தூய்மைப் பணியாளர்களின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.


இதையும் வாசிக்கலாமே...

x