எங்களின் உற்ற நண்பனான ஆட்சியருக்கு சிலை வைப்போம்... மேளதாளத்துடன் வந்து வாழ்த்திய விவசாயிகள்!


ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விவசாயிகள்

கடந்தாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீண்ட கால போராட்டத்திற்கு பின் நிவாரணம் பெற்று தந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு மேளதாளத்துடன் வந்து விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்த விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தது. அதன் அடிப்படையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாவில் உள்ள கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், அகர வல்லம், கிளியனூர் எடக்குடி, கொடைவிளாகம் ஆகிய எட்டு கிராமங்களுக்கு பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

நிவாரணம் வழங்கக்கோரி பலமுறை மனு அளித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து விடுபட்டு போன 8 கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்விளைவாக விடுபட்டுப்போன 8 கிராம விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை மற்றும் உளுந்து பயிர்கள் நிவாரணம் என 5 கோடி 86 லட்சம் ரூபாய் சமீபத்தில் அரசால் வழங்கப்பட்டது.

ஆட்சியரை பாராட்டி கேடயம் வழங்கும் விவசாயிகள்

அதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தமிழக அரசிடமிருந்து நிவாரணத்தொகையை பெற்றுத்தந்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆட்சியருக்கு கேடயங்கள் மற்றும் சால்வை அணிவித்து மகிழ்ந்த விவசாயிகள், தங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு சிலை வைப்போம் என்று கூறி நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர். அங்கிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வெள்ள நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய் தொகையினை விவசாயிகள் ஒன்றிணைந்து வழங்கினர்.


இதையும் வாசிக்கலாமே...

x