சிவகாசி: ரயில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகை யில் மதுரை-கொல்லம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் ‘விஸ்டாடோம்' எனப்படும் கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இயற்கை எழில் மிகுந்த மலை ரயில் பாதைகளில் செங்கோட்டை-புனலூர் ரயில் பாதை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1902-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த ரயில் பாதையில் முதலில் சரக்கு ரயில்களும் 1904 முதல் பயணிகள் ரயில் களும் இயக்கப்பட்டன.
இப்பாதையில் அதிக வளைவுகள், ஏற்ற-இறக்கம், ஆண்டின் பெரும்பாலான நாட்களில் மழை பெய்வது உள்ளிட்ட காரணங்களால் ரயிலின் முன்னும், பின்னும் 2 இன்ஜின்களுடன், அதிக பட்சம் 14 பெட்டிகளுடன் மணிக்கு 30 கி.மீ. வேகத்துக்கு மிகாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இயற்கை காட்சிகளுடன் கூடிய பாதை: நாட்டில் உள்ள ரயில் பாதை களிலேயே இங்குதான் மிகவும் குறை வான வேகத்தில் (30 கி.மீ.) ரயில்கள் இயக்கப்படுகின்றன. 49 கி.மீ. தூரம் உள்ள இந்த ரயில் பாதையில் 6 குகைகள், 50-க்கும் மேற்பட்ட வளை வுகள் உள்ளன. இவ்வழியாகச் செல்லும்போது மலைச்சரிவுகள், பள்ளத் தாக்குகள், அருவிகள், அடர்ந்த காடுகள் என அழகான இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.
இத்தடத்தில் கழுத்துருட்டி 13 கண் பாலம் உட்பட 200 பாலங்கள், 2,230 அடி நீளம் கொண்ட கோட்டை வாசல் சுரங்கப்பாதை உள்ளிட்ட 6 சுரங்கப் பாதைகள் உள்ளன. இவ்வழித் தடத்தில் குறைவான வேகத்திலேயே ரயில்கள் செல்வதால், கண்ணாடி மேற் கூரையுடன் கூடிய விஸ்டாடோம் ரயில் பெட்டிகளை இணைப்பதன் மூலம் ரயில் சுற்றுலா மேம்படும் என ரயில் ஆர்வலர்கள் கூறு கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள், ரயில் ஆர்வலர்கள் கூறியதாவது: மலை ரயில் பாதைகளில் இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்வதற்காக கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் கடந்த 2017-ல் ரயில்வே துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பெட்டியில் 360° சுழலும் இருக்கைகள் மற்றும் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப் பட்டு இருக்கும். இவை சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செங்கோட்டை-புனலூர் வழித் தடத்தில் உள்ள மலைப்பாதையில் ரயில்கள் செல்லும்போது பயணிகள் படிக்கட்டுகளிலும், ஜன்னல் ஓரங்களிலும் முண்டியடித்து இயற்கையை ரசிக்க சிரமப்படுகின்றனர்.
எனவே, இத்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் விஸ்டாடோம் ரயில் பெட்டிகளை இணைப்பதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா பெரும் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, செங்கோட்டை-புனலூர் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து சோதனை ஓட்டம் முடிந்துள்ளது.
புனலூரில் துணை மின் நிலையம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரியில் நடந்த ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை மேம்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது விஸ்டாடோம் ரயில் பெட்டியும் இணைக்கப்பட்டு சோதனை நடந்தது.
மின்மயமாக்கல் பணி முடிந்ததும், இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் விஸ்டாடோம் பெட்டி இணைப்பது, மதுரை-கொல்லம் வந்தே பாரத் ரயில், தென்காசி-புனலூர் மெமோ ரயில் உள்ளிட்ட ரயில் சேவைகளை மேம் படுத்தும் திட்டங்கள் ரயில்வே நிர்வாகக் குழுவின் பரிசீலனையில் உள்ளன, என்று கூறினர்.