மயிலாடுதுறை அருகே இறந்து போன நண்பனின் பிறந்த நாளை அவரது நண்பர்கள் இடுகாட்டில் வைத்து கண்ணீருடன் கொண்டாடியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன்(38). இவர் கடந்த நவம்பர் 28 ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருக்கு 39 ம் ஆண்டு பிறந்த தினம் நேற்று வந்துள்ளது. அவரது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட அவருடைய நண்பர்கள் முடிவு செய்தனர்.
அதுவும் அவரை அடக்கம் செய்த இடுகாட்டில் வைத்து நண்பனின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அவரை அடக்கம் செய்த இடுகாடு சமாதியில் சக நண்பர்கள் அவரது திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்தனர். அதன்பின்னர் படத்துக்கு மலர்தூவி, கேக் வெட்டி புகைப்படத்திற்கு ஊட்டிவிட்டு பாசத்தைக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாடினர்.
உயிரிழந்த நண்பனுக்குப் பிடித்த இனிப்பு வகைகள் வைத்து, படையலிட்டும், பிடித்த விளையாட்டான செஸ் (சதுரங்கம்) விளையாடியும் நண்பனின் பிறந்தநாளை கொண்டாடினர். சிறு வயதிலிருந்தே ஒன்றாகச் சுற்றித்திரிந்த நண்பன் இறந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!