பால் தந்த பசு மாட்டுக்கு சிலை... கோயில் பூசாரியின் நன்றி விசுவாசம்!


பசுமாட்டுக்கு சிலை வைத்து பூசாரி குமார்

கோயில் பூசாரி ஒருவர், தான் வளர்த்த கால்நடை மீது வைத்திருந்த அன்பின் காரணமாக அது இறந்தபிறகு அந்த பசுவிற்கு சிலை வடித்து தன் பாசத்தையும், நன்றி விசுவாசத்தையும் வெளிக் காட்டியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பரம்பரை பூசாரியாக குமார் (40) பணியாற்றி வருகிறார். இந்த கோயிலில் 20 ஆண்டுகளாக பசுமாடு ஒன்றை அவர் வளர்த்து வந்தார். இந்த பசு மாடு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கோபூஜையில் பங்கேற்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதற்கு லெட்சுமி என்ற பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்தனர்.

படையலிட்ட உணவை பக்தர்கள் பசுவுக்கு கொடுத்து மகிழ்ந்து வந்தனர். இந்த பசு இதுவரை 12 கன்றுகள் ஈன்றுள்ளது. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றி காணப்பட்ட பசு சமீபத்தில் இறந்தது.

பசுவை பாசத்தோடு வளர்த்த குமாரும் அவர் குடும்பத்தினரும், பக்தர்களும் பசுவுக்கு மலரஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு அழுதனர். பசு இறந்தால் அதற்கு சிலை வைக்க வேண்டும் என்று பசு உடல்நலம் இல்லாமல் இருக்கும்போதே முடிவு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து கன்றுடன் கூடிய 5 அடி உயர சிலை கிராம மக்கள் சார்பில் செய்யப் பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பசு இறந்ததும் கோயில் வளாகத்தில் அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி கட்டப்பட்டது. அந்த சமாதி மீது நேற்று கன்றுடன் கூடிய பசுவின் சிலை நிறுவப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பசுவின் சிலையை வணங்கிச் செல்கின்றனர்.

கோயில் பூசாரியின் இந்த செயல் அனைத்து உயிர்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறது.

x