நிறுவனத்தின் ஒர்க் ஃபிரம் ஹோம் பணியாளர்களை வழிக்கு கொண்டு வர, புதிய நெருக்கடிகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளது முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெல்.
கொரோனா பரவல் காலத்தில் உலகெங்கும் அதிகரித்த வொர்க் ஃபிரம் ஹோம் பணிச்சூழல், கொரோனா போன பிறகும் பணியாளர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது. வீடு - வேலை இரண்டுக்கும் போதிய நேரம் வழங்க முடிவது, போக்குவரத்துக்கான நேரம் மிச்சமாவது, பணித்திறனில் மேம்பாடுக்கான வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களினால் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதை கைவிட முடியாது பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.
இவர்களை மீண்டும் அலுவலகத்துக்கு இழுப்பதற்கு ஐடி நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. அவற்றில் ஒன்று பிரபல டெல் நிறுவனம். வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது என்ற உத்தியை டெல் நிறுவனம் கொரோனா காலத்துக்கு முன்பிருந்தே கைக்கொண்டு வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, விருப்பமுள்ள பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என டெல் நிறுவனம் சலுகை வழங்கியது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளை அதிகம் அரவணைத்த பெருமையும், சாதனையும் டெல் நிறுவனத்துக்கு சேர்ந்தது.
ஆனால் ஹைபிரிட் எனப்படும், வீடு - அலுவலகம் என இரண்டிலும் கணிசமான வேலை நாட்களை பகிர்ந்துகொள்வதான வாய்ப்பை டெல் நிறுவனம் அறிமுகம் செய்த பிறகும் பணியாளர்கள் மத்தியில் மாற்றம் வரவில்லை. காலாண்டில் குறைந்தது 39 நாட்கள், அல்லது வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் என அலுவலகத்துக்கு ஊழியர்கள் வருவது அவசியம் என டெல் அறிவித்து பார்த்தது. ஆனால் ஊழியர்கள் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
இதனையடுத்து அவர்களை வழிக்கு கொண்டுவர புதிய நெருக்கடிகளை டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வீட்டிலிருந்தே வேலை பார்ப்போர் தங்களுக்கான பணி உயர்வு வாய்ப்புகளை இழக்க நேரிடும் என டெல் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...