பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் விலகிய அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் மும்பையில் உள்ள ஐஐடியில் பயிற்சி பேராசிரியராக பணியில் இணைந்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் திடீரென விலகினார். இது தொடர்பாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த போதும், அவரது விலகல் இந்தியாவில் ஐடி துறையினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதேசமயம் ஆலோசனை நிறுவனமான பிசிஜியில் ஊடகம் மற்றும் தொலைத் தொடர்பு துறையில் மூத்த ஆலோசகராக ராஜேஷ் கோபிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மும்பை ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், அறிவுசார் சொத்து ஆய்வகத்திலிருந்து தொழில்துறைக்கு மாறுவதை ஆதரிக்க சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகளை மேலும் விரைவுப்படுத்த ராஜேஷ் கோபிநாதன் நியமிக்கப்பட்டு புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ராஜேஷ் கோபிநாதன் பயிற்சி பேராசிரியராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஐடி ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே மீண்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து... பள்ளி மாணவன் வெறிச்செயல்!