ரூ.9,760 கோடிக்கான 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே? கன்னத்தில் கை வைத்து காத்திருக்கும் ரிசர்வ் வங்கி


2000 ரூபாய் நோட்டு

திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பான 2000 ரூபாய் நோட்டுகளில், ரூ.9,760 கோடி மதிப்பிலானவை இன்னமும் வங்கிகளுக்குத் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள், 2016-ம் ஆண்டு நவம்பரில், பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய கரன்சிகளின் வரிசையில், 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றை அச்சடிக்கும் பணியும் அடுத்த 2 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டன.

2000 ரூபாய் நோட்டு

இந்த 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெறுவதாக மே 19, 2023 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, அன்றை தினத்தில் ரூ3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. நேற்றைய(நவ.30) நிலவரப்படி இந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.26 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பி உள்ளன. சுமார் ரூ.9,760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் இன்னமும் எங்கேயோ முடங்கி கிடக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில், 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இதற்கான காலக்கெடுவாக செப்.30 அறிவிக்கப்பட்டது. பின்னர் அது அக்.7 வரை நீட்டிக்கப்பட்டது.

2000 ரூபாய் நோட்டு

அதன் பிறகு டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் உட்பட ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டும் இந்த வசதி கிடைத்து வருகிறது. இங்குள்ள ரிசர்வ் வங்கியின் கிளை அலுவலங்களில் வேலை நாட்களில், சொற்பமான 2000 ரூபாய் நோட்டுகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் சுமார் ரூ9,500 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் தாள்கள் வங்கிகளுக்கு திரும்புவது சந்தேகமாகி உள்ளது. அவை கருப்பு பணமாகவோ, நிழலுக நபர்களிடம் பதுக்கலாகவோ சேர்ந்திருக்கலாம். முறைகேடான பின்னணி காரணமாக அவை வெளிச்சத்துக்கு வர இயலாது தவித்து வருகின்றன.

x