தினம் 500 ரூபாய் பரிசு... ஒளித்து வைத்து ஊரை அலையவிடும் இன்ஸ்டா பிரபலம்


தினம் ரூ500 பரிசு

இன்ஸ்டா இளைஞர் ஒருவர் தினமும் ஒரு 500 ரூபாய் நோட்டை ஒளித்து வைத்து அதனை கண்டுபிடிக்க ஊரை அலையவிட்டு பிரபலமாகி வருகிறார்.

அலுப்பும் சலிப்புமாக துவண்டு கிடக்கும் அன்றாடங்களை கடக்க ஏதேனுமொரு சுவாரசியம் அவசியமாகிறது. அந்த சின்ன சுவாரசியம் சிறிய பரிசுத் தொகையுடன் வரும்போது, சுவாரசியத்தின் ருசி மேலும் கூடுமல்லவா?

மறைவிடத்தில் ஒளித்து வைக்கப்படும் ரூ500 நோட்டு

இந்த கேள்வியில் உதயமானதுதான் ’புதையல் வேட்டை டெல்லி’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கம். டெல்லியின் அதிகம் அறியப்படாத மூலைகளில் 500 ரூபாய் நோட்டை ஒளித்து வைக்கும் வீடியோ இன்ஸ்டாவில் பதிவிடப்படுகிறது. பக்கத்தை பின்தொடர்வோர் விரும்பினால், அந்த இடத்தை கண்டறிந்து ரூபாயை உரிமையாக்கிக் கொள்ளலாம்.

சமூக ஊடகங்களில் பிரபலமாவது வருமானத்தை வாரித் தரக்கூடியது. இந்த வகையில் பலரும் சமூக ஊடகங்களில் தங்களுக்கான ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை உயர்த்த போராடித் தவிர்க்கின்றனர். ’புதையல் வேட்டை’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய அநாமதேய இளைஞர் ஒருவர் அதிகம் யோசிக்கவில்லை. தினம் ரூ500 முதலீட்டில் ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்ஸை அடைந்து வருகிறார்.

இதற்காக தினம் ஒரு ரூ500 நோட்டை, நகரின் ஒரு மூலையில் எங்கேனும் மறைத்து வைக்கிறார். வீடியோவில் தென்படும் தெளிவற்றை அடையாளங்களை வைத்து, விரும்புவோர் அந்த பணத்தை விரைந்து சொந்தமாக்கிக் கொள்ளலாம். புதையல் என்று சொல்லுமளவுக்கு எல்லாம் அது பெரிய தொகையல்ல. ஆனால் அந்த விளையாட்டில் கிடைக்கும் சுவாரசியம், அங்கே கிடைக்கும் ரூ500 நோட்டின் மதிப்பை பல மடங்கு உயர்த்தி விடுகிறது. அன்றாடத்தின் அலுப்பையும் இந்த ஆதி விளையாட்டு போக்க உதவுகிறது.

புதையல் வேட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிர்வகிக்கும், அடையாளம் தெரிவிக்க விரும்பாத இளைஞர் அடிப்படையில் ஒரு கேம்ஸ் டெவலெப்பர். ஆன்லைன் விளையாட்டுக்கு கோடிங் எழுதும் அவர், அரதப் பழசான கண்ணாமூச்சி ஆட்டத்தை நிஜத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார். அவரது இன்ஸ்டா பக்கம் விரைந்து பிரபலமாகி வருவதால் ஸ்பான்சர்களும் மொய்க்க ஆரம்பித்துள்ளனர்.

அதன் மூலம் தானும் வருமானம் பார்ப்பதோடு, புதையல் தொகையான ரூ500 என்பதை மேலும் அதிகரிக்க அந்த இளைஞர் முடிவு செய்திருக்கிறார். கூடவே, டெல்லி புறநகர்ப்பகுதில்களின் அதிகம் அறியப்படாத இடங்களையும் தனது புதையல் வேட்டை விளையாட்டின் வாயிலாக வெளியுலகுக்கு தெரிவித்து வருகிறார். இதனைப் பார்க்கும் வேறு சிலரும் தங்கள் ஊரியில் ரூ500 உடன் புதையல் வேட்டையை ஆரம்பித்து வருகிறார்கள்.

x