கடலோர காவல் படை சார்பில் கடல் பகுதியில் தேடுதல், மீட்பு பயிற்சி ஒத்திகை @ தூத்துக்குடி


தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் | படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: இந்திய கடலோர காவல் படை சார்பில் மண்டல அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி ஒத்திகை தூத்துக்குடி அருகே நடுக்கடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சியில் தூத்துக்குடி கடலோர காவல் படையில் உள்ள வஜ்ரா, வைபவ், ஆதேஷ், அபிராஜ், அதுல்யா ஆகிய 5 ரோந்து கப்பல்களும், ஒரு டோர்னியர் விமானம் மற்றும் ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபட்டன. தூத்துக்குடியில் இருந்து சுமார் 5 கடல்மைல் தொலைவில் திடீரென ஒரு சரக்கு கப்பலில் தீப்பிடித்தது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படை ரோந்து கப்பல் விரைந்து சென்று, கப்பலில் உள்ள மோட்டார் மூலம் கடல் நீர் உறிஞ்சப்பட்டு, தீப்பிடித்த கப்பல் மீது பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது. தொடர்ந்து கப்பலில் இருந்த மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதேபோன்று நடுக்கடலில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தால், அதில் மீட்பு பணிகளை எப்படி கையாள வேண்டும் என்று ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது மீட்பு படகுகள், கப்பல் மருத்துவமனை உள்ளிட்டவை விபத்து நடந்த பகுதி நோக்கி விரைந்தன. அதே நேரத்தில் டோர்னியர் விமானம் தாழ்வாக பறந்து சென்று, விபத்தில் சிக்கி கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தவர்கள் அருகே உயிர் காப்பு மிதவைகளை போட்டன. அந்த மிதவை படகு போன்று மாறியது. இதில் விபத்தில் சிக்கியவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொள்ள முடியும்.

இதில் 3 நாட்கள் வரை உயிர்வாழ்வதற்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை பயன்படுத்தும் முறையும் விளக்கி கூறப்பட்டது.
பின்னர் கப்பல்கள் செல்ல முடியாத பகுதியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக்கூடிய மீட்பு படகை செலுத்தி தத்தளிப்பவர்களை மீட்பது, கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவரை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி மீட்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

பயிற்சியின் போது, கடலோர காவல்படை, உள்ளூர் போலீஸார், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், விமான நிலைய அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன், மீட்பு பணியின் போது ஏற்படும் இடர்பாடுகளை களைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கடலோர காவல்படையின் தூத்துக்குடி நிலைய கமாண்டிங் அதிகாரியான டிஐஜி டி.எஸ்.சவுகான் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை டிஎஸ்பி பிரதாபன், ஆய்வாளர் சைரஸ் மற்றும் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

x