ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக சாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என காத்திருந்த எதிர்க்கட்சியினருக்கு வகையாக சிக்கியிருக்கிறது தேர்தல் பத்திரம் விவகாரம்.
உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய பிறகே, தேர்தல் பத்திரம் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட, அதனை பிரித்து மேய்ந்து பாஜக மற்றும் மோடியை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திய பாஜக முன்வைத்த பிரதான வாக்குறுதி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்பதே! அதற்கேற்ப, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் சகலத்திலும் ஊழல்கள் பெருக்கெடுத்திருந்தன. அவை குறித்தான அதிருப்தி மற்றும் மாற்றம் தேடிய மக்களுக்கு, பாஜக நம்பிக்கை ஊட்டியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சியிலான ஊழல்கள் பட்டியலிட்டது.
ஆட்சியை பிடிப்பது வரை மட்டுமல்ல, ஆட்சியில் அமர்ந்து 10 வருடத்தை நிறைவு செய்வது வரை பாஜக இன்னமும் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களுக்கு எதிராகவே புகார் பாடி வருகிறது. பிரதமர் மோடி இன்னமும் காங்கிரஸை ஊழலின் அடையாளமாகவே சுட்டிக்காட்டி வருகிறார். இன்னொரு திசையிலிருந்து காங்கிரஸ் மீது இதே சேற்றை ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வாரியிறைத்தன.
ஆனால், பாஜக ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் இல்லையா என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சற்று முன்னர் வரை உரத்த பதில் இல்லாமல் இருந்தது. மாறாக எதிர்க்கட்சிகளில் ஊழல் கறை படிந்தவர்களை ’வாஷிங் மெஷின்’ உத்தரவாதத்துடன் பாஜக அரவணைத்துக் கொள்வது மட்டும் தொடர்ந்து வந்தது. மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணை வளையத்தில் சிக்கிய எதிர்க்கட்சி பிரபலங்கள் பலரும் பாஜகவுக்கு தாவி தங்களை பாதுகாத்துக்கொண்டனர்.
இந்த மத்திய விசாரணை அமைப்புகளின் உபயத்தில், பெரும் நிறுவனங்களுக்கு அழுத்தம் தந்து பல்லாயிரம் கோடி கட்சி நன்கொடைகளை வாரிக் குவித்திருப்பதாக பாஜக மீது ’தேர்தல் பத்திரம் ஊழல்’ என்ற தலைப்பில் எதிர்க்கட்சிகள் புகார் வாசிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தளவுக்கு, அமலாக்கத்துறை பாய்ச்சல் மற்றும் அந்த நிறுவனம் தேர்தல் பத்திரம் வழங்கியது ஆகிய தினங்கள் நெருக்கமாக அமைந்துள்ளன.
அமலாக்கத்துறை விசாரணை வீச்சுக்கு பயந்து பெரு நிறுவனங்கள் பாஜகவுக்கு கோடிகளை நன்கொடையாக வாரியிறைத்ததாகவும், அந்த பேரத்துக்குப் பின்னர் அமலாக்கத்துறை வேகம் தணிந்திருப்பதாகவும் அந்த குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
இந்த நாள் ஒப்பீடு மட்டுமன்றி, பாஜகவுக்கு நெருக்கமான அம்பானி, அதானி ஆகிய நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் பட்டியலில் இடம்பெறாதது குறித்தும், தொடக்கத்தில் நெட்டிசன்கள் ஆச்சரியம் தெரிவித்தனர். அதன் பின்னரே தங்களது கிளை நிறுவனங்கள் வாயிலாக மறைமுகமாக இந்த பெரு நிறுவனங்கள் பல நூறு கோடிகளை வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அடுக்கும் நெட்டிசன்களின் தரவுகளை பகிரும் திமுக அபிமானிகள், இந்திய வரலாற்றின் பெரும் ஊழல் கறை கடிந்த பிரதமர் மோடி என்று தங்கள் பதிவுகளை வைரலாக்குகிறார்கள்.
இவற்றை முன்வைத்து #VasoolRajaModi என்று தமிழகத்திலும், #ElectoralBondsScam என்று தேசிய அளவிலும் டிரெண்டிங் முன்னிலை வகிக்கிறது. அமலாக்கத்துறை ED(Enforcement directorate) என்பதை வழிப்பறிக்கான துறையாக(Extortion Department) மீம்ஸ் போடுகிறார்கள். அதிலும் திமுக முன்னாள் நிர்வாகியும், போதை கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக்கை முன்வைத்து, பாஜக ஆதரவாளர்களிடம் வெகுவாய் அடிவாங்கிய திமுகவினர், தற்போது வெளியாகி இருக்கும் தேர்தல் பத்திரங்களை கூராய்வு செய்து பாஜகவின் மறுமுகத்தை இணையத்தில் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
இவை வழக்கமான பரஸ்பரம் மீம்ஸ், டிரெண்டிங் சாடலுடனான இணையக் கச்சேரியாக முடிந்துவிடுமா அல்லது மக்களவை தேர்தல் வரை எதிரொலிக்குமா என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும்.
இதையும் வாசிக்கலாமே...
'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!
‘ஆமா! குடும்ப ஆட்சிதான்! தொண்டர்கள் உற்சாகம்... அதிர வைக்கும் திமுக!