நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவை ஆராயும் இந்தியாவின் சந்திரயான் திட்டங்களின் மூன்றாம் அத்தியாயமான சந்திரயான் 3 வெற்றி பெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. சந்திரயான் திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த லேண்டர் தரையிறக்கம், அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
முந்தைய சந்திரயான் 2 திட்டத்தின் தோல்வி முகத்துக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின் தடுமாற்றமே காரணமானது. அந்த தோல்வியில் இருந்தே பாடங்கள் கற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் அதன் அடிப்படையில், வடிவமைத்த தொழில்நுட்பம் தற்போது விக்ரம் லேண்டரின் வெற்றிகர தரையிறங்கலை சாத்தியமாக்கி இருக்கிறது.
ஆக.23 மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டரின் தரையிறக்கத்துக்கு இஸ்ரோ நேரம் குறித்திருந்தது. இதனை முன்னிட்டு மாலை 5.20 முதலே நேரலையில் மக்கள் ஆர்வமாக குழுமியிருந்தனர். தொலைக்காட்சிகள், இஸ்ரோவின் சமூக வலைதளப் பக்கங்கள், ஊடகங்கள் உள்ளிட்டவை இந்த நேரலைகளை ஒளிபரப்பின. தேர்வு முடிவு வெளியாவது போல லேண்டரின் செங்குத்து தரையிறக்கம் மற்றும் அதன் ராக்கெட்டுகள் செயல்பட்ட விதம் உள்ளிட்டவை வெற்றிகரமான தொடக்கத்தை அளித்தன.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரலையில் மகிழ்ச்சி தெரிவித்தனர். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்தபடி ஆன்லைனில் இஸ்ரோ நிகழ்வுகளையும், விக்ரம் லேண்டர் தரையிறங்கலையும் பார்வையிட்டார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான் 3 வெற்றியை உறுதி செய்ததும், ஆன்லைன் வாயிலாக பிரதமர் மோடி வெற்றி உரை நிகழ்த்தினார்.
சர்வதேச அளவில் பிரபலங்களும், பொதுமக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.