நிதிநெருக்கடியால் நாடு நெடுக அலுவலகங்களை மூடும் பைஜூஸ்; 14,000 ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவு


காலியாகும் பைஜூஸ் அலுவலகம்

கடும் நிதி நெருக்கடி காரணமாக பைஜூஸ் நிறுவனம் தனது இந்திய கிளை அலுவலகங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டிருக்கிறது. அங்கு பணியாற்றும் 14 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டிலிருந்தே பணியைத் தொடருமாறு உத்தரவிட்டிருக்கிறது.

பைஜூஸ், பேடிஎம் என 2 நிறுவனங்களின் வீழ்ச்சி, இந்திய தொழில்துறையில் தற்போது பெரு கவனம் பெற்றுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மத்தியில் கவலைக்குரிய பாடமாகவும் இவை மாறி வருகின்றன. இவற்றில் கொரோனா காலத்தில் உச்சம் தொட்டிருந்த பைஜூஸ் எஜூ-டெக் நிறுவனம் படிப்படியாக சரிந்து தற்போது தலைக்குப்புற வீழ்ந்திருக்கிறது. ஒரு காலத்தில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலிருந்த பைஜூஸ் தற்போது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட வழியின்றி தள்ளாடுகிறது.

பைஜூஸ்

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஊரடங்கு காரணமாக நேரடி வகுப்புகள் ரத்தானதில், பைஜூஸ் போன்ற ஆன்லைன் கல்வி மையங்களை பெற்றோர் அதிகம் நாடினார்கள். அவற்றை நம்பி பைஜூஸ் அகலக்கால் வைத்தது பிற்பாடு பிரச்சினையானது. கொரோனா தணிந்ததும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் திறந்ததும் பைஜூஸ் சேர்க்கை குறைந்தது.

படிப்படியாக சரிந்த பைஜூஸ், தற்போது கிளை அலுவலகங்களுக்கு வாடகை வழங்க முடியாததில் அவற்றை மூட உத்தரவிட்டிருக்கிறது. பெங்களூரு தலைமை அலுவலகம் தவிர்த்து இதர கிளைகள் அனைத்தையும் காலி செய்ய தற்போது உத்தரவிட்டிருக்கிறது. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாதது குறித்து ஏற்கனவே வருத்தம் தெரிவித்து வந்த பைஜூஸ், தற்போது 14 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறது.

பைஜூஸ்

சுமார் 1000 ஊழியர்கள் பணியாற்றும் பெங்களூரு ஐபிசி நாலெட்ஜ் பார்க் தவிர்த்து இதர கிளைகள் அனைத்துமே இதனால் அடைக்கப்படுகின்றனர். மேலும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் நேரடியாக பயிற்சி பெறும் சுமா 300 மையங்கள் தற்போதைக்கு தொடர்ந்து செயல்படவும் பைஜூஸ் அனுமதித்துள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் ஆதரவை இழந்ததில் பைஜூஸ் பங்குகள் வெகுவாக சரிவு கண்டிருக்கின்றன. பைஜூஸ் சரிவு இதர எஜு-டெக் நிறுவனங்களையும் தொற்றுமோ என்ற கவலையில் இந்திய தொழில்துறை ஆழ்ந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x