வாட்டிய வறுமை... தியேட்டர் கேன்டீனில் சிப்ஸ் வியாபாரம்... சாதித்த சகோதரர்களின் பின்னணி!


சந்துபாய் விராணி

வறுமையின் பிடியில் தியேட்டரில் ஆரம்பித்த சிப்ஸ் வியாபாரம் இன்று வட மாநிலங்களில் மிகப்பெரிய நிறுவனமாக மாறியிருக்கும் வெற்றிக்கதை அனைவருக்கும் வாழ்க்கையில் உயர்வதன் உத்தியை கற்றுத் தருவதாக அமைந்திருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய சிப்ஸ் கம்பெனியாக பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடெட் திகழ்கிறது. இதன் உரிமையாளரான சந்துபாய் விராணியின் வாழ்க்கை பின்னணி நமக்கு பெரிய உத்வேகத்தை அளிப்பதாக இருக்கும்.

குஜராத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சந்துபாய் விராணி. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அவரும் அவரது இரண்டு சகோதரர்களும் வளர்ந்தனர். 15 வயதில் அவரும், அவரது குடும்பத்தினரும் துண்டோராஜிக்கு குடி பெயர்ந்தனர். அவரது தந்தை போபட்பாய் விராணியின் சேமிப்பில் வாழ்ந்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், கடும் வறட்சி காரணமாக போபட்பாய் விராணி தனது விவசாய நிலத்தை ரூ.20,000க்கு விற்பனை செய்தார். அந்த பணத்தை தனது மகன்களிடம் தொழில் தொடங்க கொடுத்தார். இதனையடுத்து ராஜ்கோட்டில் சந்துபாய் மற்றும் அவரது சகோதரர்களும் உரம் மற்றும் வேளாண் உபகரணங்கள் விற்பனை தொழிலை தொடங்கினர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

இதனால் வேறுவழியில்லாமல் சகோதரர்கள் மூவரும் ஆஸ்ட்ரோன் சினிமாவில் (Astron Cinema) வேலை செய்தனர். திரையரங்கு வளாகத்தில் ஒரு கேன்டீனைப் பிடித்து, தங்கள் வீட்டில் தயாரித்த சிப்ஸ்களை (வேஃபர்ஸ்) விற்க தொடங்கினர். அந்த வளாகத்தில் உள்ள ஒரு கோயிலின் (பாலாஜி) பெயரை சிப்ஸ்க்கு பெயரிட்டனர். இவர்களின் சிப்ஸ் மிகவும் பிரபலமானது, அவர்கள் வாழ்க்கையும் மீளத்தொடங்கியது.

முதல் 15 ஆண்டுகளுக்கு, அவர்களின் வீட்டில் மட்டுமே சிப்ஸ்கள் தயாரிக்கப்பட்டன. ராஜ்கோட் நகரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இவர்களின் சிப்ஸ் பிரபலமானது. வர்த்தகம் ஒரு கட்டத்துக்கு மேல் வளர்ந்ததால், ராஜ்கோட் நகரில் ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையையும் அமைத்தார். இதனால் வர்த்தகம் பல மடங்கு விரிவடைந்தது.

இதன் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு இடங்களில் 4 ஆலைகளை பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடெட் தொடங்கியது. சந்துபாயின் உறுதியும், தொலைநோக்கு பார்வையும் அவரை ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் மன்னனாக மாற்றியது. சுல்தான் ஆப் சிப்ஸ் என்று அங்கீகரிக்கப்பட்ட பாலாஜி வேஃபர்ஸ் மேற்கு சந்தையில் சிப்ஸ் வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கிறது.

குஜராத்தில் சிப்ஸ் வர்த்தகத்தில் பெரிய சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது சந்துபாய் கம்பெனி. சிப்ஸின் தரம் மற்றும் பல்வேறு வகைகள், லேஸ் சிப்ஸ் தயாரிக்கும் பெப்சிகோவின் கவனத்தை ஈர்த்தது. தற்போது சந்துபாயின் பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது குறித்து பெப்சிகோ ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020-21ம் நிதியாண்டில் பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,000 கோடியாக இருந்தது. இன்று இந்நிறுவனத்தில் 5,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் பாதி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

x