கோடை மழையால் கொடியிலேயே சேதமடைந்த திராட்சை - திண்டுக்கல் விவசாயிகள் கவலை


திண்டுக்கல் அருகே செட்டியபட்டி கிராமத்தில் விளைந்துள்ள திராட்சை பழங்கள்.

திண்டுக்கல்: அறுவடை நேரத்தில் மழை பெய்து வருவதால், திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள திராட்சை பழங்கள் கொடியிலேயே சேதமாவதால், விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் கொடை ரோடு வரை சிறுமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களான வெள்ளோடு, நரசிங்கபுரம், கோம்பை, ஜாதிக்கவுண்டன் பட்டி, காந்தி கிராமம், அம்பாத்துரை, அமலி நகர், பெருமாள் கோயில்பட்டி ஊத்துப்பட்டி, மெட்டூர் உள்ளிட்ட மலையடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் பந்தல் அமைத்து திராட்சை பயிரிட்டுள் ளனர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திராட்சை அறுவடை செய்யப்படும். சில வாரங்களுக்கு முன் வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், விவசாயிகள் அறு வடையை தொடங்கினர்.

அப்போது, வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து ஒரு கிலோ ரூ.40 கொடுத்து வாங்கிச் சென்றனர். வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. உரிய விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அறுவடை இன்னமும் முடி யாத நிலையில், திண்டுக்கல் உட்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திராட்சை பழங்கள் பாதிப்படைந்து, விற்பனைக்கு அனுப்ப தகுதியில்லாத நிலையில் உள் ளன.

இதுகுறித்து செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த திராட்சை விவசாயி சேசுராஜ் கூறியதாவது: திராட்சை விவசாயத்துக்கு அளவான தண்ணீர், மிதமான வெயில் இருக்க வேண்டும். இந்த தட்பவெப்பநிலை சிறுமலை அடிவாரப் பகுதிகளில் காணப்படுவதால்தான், மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது.

இந்த வாரத் தொடக்கம் முதலே கோடைமழை பெய்யத் தொடங்கியது. மிதமாக மழை பெய்தால் திராட்சை பழங்களை காப்பாற்றி விடலாம். ஆனால், கடந்த சில தினங்களாக கனமழை பெய் ததால், திராட்சை கொடியில் உள்ள பழங்களில் நீர் கோர்த்து பழங்கள் உதிர்கின்றன.

மேலும், வெப்பத்தின் தாக்கமும் குறைந்ததால் திராட்சை பழங்களின் தேவையும் குறைந்துவிட்டதாகக் கூறி, வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயங்கு கின்றனர்.

மழைக்கு முன் ரூ.40-க்கு வாங்கிய வியாபாரிகள், தற் போது பாதியாக குறைத்து ரூ.20-க்குத்தான் கொள்முதல் செய்கின்றனர். இதனால் திராட்சை விவசாயிகள் நஷ்டம் அடைந்து ள்ளனர்.

இந்த மாதம் இறுதி வரை மழை இல்லாமல் இருந்திருந்தால், பெரும்பாலான விவசாயிகள் அறுவடையை முடித்திருப்பர். ஆனால், கோடைமழையால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர் என்றார்.