தமிழ்நாட்டில் மாதந்தோறும் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் தரும் வகையில் தொழில்நுட்ப கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்ட வருவதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மாநிலத்தின் ஐ.டி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறார். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் அலுவலகத்தைத் திறந்து வருகின்றன.
இதேபோல் ஐ.டி துறையின் வளர்ச்சியை இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களுக்குக் கொண்டு செல்வதில் அவர் தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் CII அமைப்பின் ஐசிடி கான்பிரென்ஸ் கனெக்ட் 2023 நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, பட்டதாரி மாணவர்கள் முதல் ஐ.டி ஊழியர்கள் வரையில் பல தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பேசினார்.
"தமிழ்நாட்டில் தற்போது ஒவ்வொரு மாதமும் 10000 கூடுதல் வேலைவாய்ப்புகள் ஐ.டி துறையில் உருவாக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் மாநில அரசு மாதம் 20,000 முதல் 25,000 வரையிலான ஐ.டி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.
உண்மையில் பெங்களூரு போன்ற நகரங்களை ஒப்பிடுகையில், நாம் பின்தங்கித்தான் உள்ளோம், ஆனால் ஐ.டி சேவை துறையில் தற்போது இருக்கும் நிலையற்ற தன்மையை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு ஐ.டி துறையின் சார்பில் அதிவேக இணைப்பு, அரசு சேவைகளில் டிஜிட்டல் மயமாக்கல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் இன்னோவேஷனுக்கான சூழ்நிலையை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பாரத்நெட் திட்டம் விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டால் அடுத்த வருடம் இதேநேரம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் 100 மெகாபிட்கள்(MBPS) இண்டர்நெட் இணைப்பு இருக்கும்.
தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் சுமார் 15 சதவீதம் ஐ.டி துறை பங்கு வகிக்கிறது, இந்த நிலையில் இத்துறையை வேகமாக விரிவாக்கம் செய்வது மூலம் இத்துறையின் வளர்ச்சி வாயிலாகத் தமிழ்நாட்டின் ஜிடிபி 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டும்" என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று BLACK FRIDAY... களை கட்டும் ஆன்லைன் விற்பனை... கம்மி விலையில் கைநிறைய அள்ளலாம்!