இன்ஸ்டாகிராமில் போட்ட புதிரான பதிவை தொடர்ந்து தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா பிரியப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை நயன்தாரா நடிகர் சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தில் அறிமுகமானார். இதன் பின்னர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்துக்கு வந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாரா உருவெடுத்துள்ளார். அண்மையில் ‘அன்னபூரணி’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது ‘மண்ணாங்கட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு ஒன்று பல்வேறு கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பியிருக்கிறது.
தொடக்கத்தில் இரண்டு முன்னணி நடிகர்களை அடுத்தடுத்து காதலித்தார் நயன்தாரா. அந்தக் காதல் எல்லாம் தோல்வியில் முடிந்தது. இதன் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார். அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் ‘நானும் ரௌடி தான்’ மற்றும் ‘அறம்’.
இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. இதன் நடுவே ‘நானும் ரௌடி தான் படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனை ஆழமாக நேசிக்க ஆரம்பித்தார் நயன். இருவரும் திருமணம் முடிக்காமலேயே ஒரே வீட்டில் வசிக்கும் அளவுக்கு பந்தமானார்கள். ஒருகட்டத்தில் இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள் இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும் விரைவில் இரண்டு பேரும் பிரியவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது இன்ஸ்டாவின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்த தவறு என விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து விக்கி மீண்டும் நயன்தாராவின் ஃபாலோயர் ஆனார்.
ஆனால், நயன்தாரா இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்கிலத்தில் புதிரான ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில், ‘உம்... நான் இழந்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதை இழந்துவிட்டார்... நயன் - விக்கி ஜோடிக்கு என்னதான் ஆச்சு என்ற விமர்சனங்களும் இணைய உலகில் வட்டமடிக்கத் தொடங்கி இருக்கின்றன.
இதையும் வாசிக்கலாமே...
ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!