அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும் இஸ்ரோ: சந்திரயான்-4 நிகழ்த்த இருக்கும் சாதனை!


சந்திராயன்-4 திட்டம் (மாதிரி படம்)

இஸ்ரோ நிலவுக்குச் செலுத்த உள்ள சந்திரயான்-4 விண்கலம், நிலவிலிருந்து பூமிக்கு பாறை மாதிரிகளைக் கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி துறையில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. உலக நாடுகளை பொறுத்தளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

குறிப்பாக பிற நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது.

சந்திராயன்-4 திட்டம் - இஸ்ரோ தீவிரம்

உதாரணமாக பல ஆயிரம் கோடி ரூபாயில் செவ்வாய் கிரகத்தை ஆராய அமெரிக்கா விண்கலத்தை அனுப்பிய நிலையில், மங்கள்யான் விண்கலம் வெறும் 400 கோடி ரூபாயில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் வெற்றிகரமான திட்டங்களாக சந்திரயான் ஒன்று, இரண்டு, மூன்று ஆகியவை இருந்து வருகிறது.

சந்திரயான்-2 திட்டத்தில், நிலவில் இறங்கும் போது ரோவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பகுதி தோல்வியாக கருதப்பட்டது. ஆனால் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதோடு, அங்கு 14 நாட்கள் ஆய்வும் நடத்தியது

சந்திராயன்-4 திட்டம் (மாதிரி படம்)

இதையடுத்து, சந்திரயான் 4 விண்கலத்தை நிலவுக்கு ஏவ இஸ்ரோ ஆயத்தமாகி வருகிறது. சந்திரயான்-1 நிலவை சுற்றிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. சந்திரயான்-3ம் அதே நோக்கத்தோடு நிலவுக்கு செலுத்தப்பட்டது.

தற்போது நிலவுக்கு செலுத்தப்பட உள்ள சந்திரயான்-4 விண்கலம் நிலவில் தரையிறங்கி அங்கு மண் அல்லது பாறை மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு, பின்னர் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நிலவிலிருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 4வது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு!

x