செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏ.ஐ நிறுவனத்தில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் மீண்டும் அந்நிறுவனத்தில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 18-ம் தேதி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏ-ஐ (OpenAI), அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. இதுதொடர்பாக நிர்வாக இயக்குநர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத் தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் ஓபன் ஏ.ஐ கூறியது.
இதைத்தொடர்ந்து, நிர்வாகக்குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது எனவும் கூறி சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. தலைமை நிர்வாகி அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன் ஏ.ஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி நியமிக்கப்பட்டார். பிறகு ஓபன் ஏ.ஐ முன்னாள் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து, புதிய மேம்பட்ட ஏ.ஐ குழுவை நிர்வகிப்பார்கள் என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்.
இதனை உறுதிசெய்து, எங்களிடம் அதிக ஒற்றுமை மற்றும் கவனம் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அல்லது வேறு வழியில் செயல்படப் போகிறோம், நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு குழு, ஒரு பணி என்று சாம் ஆல்ட்மேன் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபன் ஏஐ நிறுவனத்தின் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பதவி விலக வேண்டும் என்றும் அவ்வாறு பதவி விலகவில்லை என்றால் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாகவும் கூறி கையெழுத்திடப்பட்ட கடிதத்தை நிர்வாக இயக்குநர்கள் குழுவிற்கு அனுப்பினர்.
இப்போது ஓபன் ஏ.ஐ நிறுவனம் சாம் ஆல்ட்மேனை மீண்டும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிப்பதற்கான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், சாம் ஆல்ட்மேனை சிஇஓ பதவியிலிருந்து நீக்கிய இயக்குநர்கள் குழு மொத்தமாக கலைக்கப்பட்டு, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஓபன் ஏ.ஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "ப்ரெட் டெய்லர் (தலைவர்), லாரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய நிர்வாக இயக்குனர்கள் குழுவுடன், சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏ.ஐக்கு தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரும்புவதற்கு கொள்கையளவில் உடன்பாட்டை எட்டியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு!
கோர விபத்து... லாரி மீது மோதிய ஆட்டோ... தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்!