கழிவறை கட்டணம் ஒரு ரூபாய்... வசூலித்தது 5 ரூபாய்... மனஉளைச்சலுக்கு 30,000 அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி


ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம்

நகராட்சி கட்டண கழிவறையில் ஒரு ரூபாய்க்கு பதிலாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நான்கு ரூபாயை திருப்பி வழங்கவும், அத்துடன் மேலும் 30,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்தவர் சுந்தரம். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இவரிடம் ஒரு ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாய் கட்டணம் வாங்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக சுந்தரம் ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதி சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுந்தரத்திடம் வசூலிக்கப்பட்ட 5 ரூபாயில் 4 ரூபாயை திரும்பத் தரவும், மன உளைச்சலுக்காக 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், மேலும் வழக்கு செலவாக 10 ஆயிரம் வழங்க வேண்டுமெனவும் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதை நகராட்சி ஆணையாளர் மற்றும் குத்தகைதாரர் இருவரும் சேர்ந்து அல்லது தனித்தனியாக வழங்கவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தொகையை 6 வார காலத்திற்குள் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, கட்ட தவறினால் உத்தரவிட்ட நாளில் இருந்து 9 சதவீத வருட வட்டியுடன் தொகையை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.


இதையும் வாசிக்கலாமே...

ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!

x