மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை மார்ச்.5 அன்று இரவில் திடீரென முடங்கின.
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செவ்வாய் இரவு திடீரென முடங்கின. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அல்லது முன்னெச்சரிக்கை ஏதும் இல்லாததில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். மெட்டா நிறுவனத்தின் குறிப்பிட்ட இரு சமூக ஊடகங்களிலும் சஞ்சரிக்க இயலாது அவர்கள் விரக்தி அடைந்தனர்.
பெரும் அளவிலான சேவை இடையூறுகள் நீடித்ததை அடுத்து, இணையவாசிகள் வழக்கம்போல தங்களது ஏமாற்றத்தை எக்ஸ் தளத்தில் கூடி தீர்த்துக்கொண்டனர். ஒரு சமூக ஊடகம் துவளும்போது, மற்றொன்றில் கூடி நெட்டிசன்கள் புலம்பும் சடங்கு இன்றைய தினமும் அரங்கேறியது.
பயனர்கள் தாங்கள் அணுக முடியாத தளங்களுடனான போராட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டனர். மேலும் தங்களது விரக்தியை மெட்டா நிறுவனத்துக்கு எதிரான கண்டனம் மட்டுமன்றி நகைச்சுவையான மீம்ஸ் வாயிலாகவும் தீர்த்துக்கொண்டனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் லாகின் பிரச்சினை எழுந்ததோடு, மெட்டா குடும்பத்தை சேர்ந்த வாட்ஸ் ஆப் செயலியும் பல நாடுகளில் துவண்டது.
இணையம் முடங்குவதை கண்காணிக்கும் டவுன்டிடெக்டர், இந்தியாவின் உள்ளூர் நேரப்படி இரவு 8.33 மணியளவில் மெட்டவின் சேவைகளில் குறுக்கீடு நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான பிரச்சினைகள் பெங்களூரு, டெல்லி, லக்னோ, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பிரதான நகரங்களில் அடையாளம் காணப்பட்டன. ஃபேஸ்புக்கை விட வீடியோ செயலியான இன்ஸ்டாகிராம் துவண்டது பயனர்கள் மத்தியில் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உருவாக்கியது.
இந்தியா மட்டுமன்றி இதர பல உலக நாடுகளிலும் மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடகங்கள் வெகுவாக துவண்டன. ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்டவை இவ்வாறு மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக சிக்கல்களை கொண்டிருந்தன. சமூக ஊடக பயனர்களுக்கு எதிரான இந்த அசவுகரியம் அவர்களை வெகுவாய் ஏமாற்றமடையச் செய்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் துவண்டது தொடர்பாக உடனடியாக மெட்டா எதிர்வினையாற்றவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
பேச்சுவார்த்தையில் சுபம்... அதிமுக - தேமுதிக நாளை ஒப்பந்தம் கையெழுத்து!