செயற்கை நுண்ணறிவு துறையில் புரட்சியை ஏற்படுத்திய ‘சாட்ஜிபிடி’யை உருவாக்கிய ’ஓபன்ஏஐ’ நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதன் சிஇஓ சாம் ஆல்ட்மேன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைகிறார்.
சாட்ஜிபிடி என்னும் பாட்(Bot) வகையினை ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் உருவாக்கியதன் மூலம், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆல்ட்மேன் உலகப்புகழ் பெற்றார். 2015-ல் ஓபன்ஏஐ நிறுவனத்தை இணைந்து உருவாக்கிய அவர் மீது நம்பிக்கை இழந்தும், சதி மற்றும் பழி தெரிவித்தும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, கடந்த வார இறுதியில் சாம் ஆல்ட்மேனை சிஇஓ பொறுப்பிலிருந்து நீக்கியது. இந்த சம்பவம் தொழில்நுட்ப துறையில் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சாம் ஆல்ட்மேன் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது சகாக்களான ப்ரோக்மேன் உட்பட ஓபன்ஏஐ நிறுவனத்தின் தூண்கள் பலரும் தங்கள் ராஜினாமாவை அறிவித்து அதிர்ச்சியை அதிகரிக்கச் செய்தனர். இந்த ஆல்ட்மேன் மற்றும் ப்ரோக்மேன் உள்ளிட்ட சகாக்களை தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அரவணைத்திருக்கிறது. இவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ ஆய்வில் இணைந்து ஈடுபடுவார்கள் என மைக்ரோசாப்டின் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
நவ.18 அன்று சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட, ஞாயிறு இடைவெளிவிட்டு நவ.19 திங்களன்று அவரது மைக்ரோசாப்ட் வருகையை நாதெல்லா உறுதி செய்திருக்கிறார். "சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன், தனது சகாக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து, புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்துவார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நாதெல்லா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
மைக்ரோசாப்டின் புதிய மேம்பட்ட AI ஆராய்ச்சி குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆல்ட்மேன் இருப்பார் எனவும் நாதெல்லா கூறினார். மைக்ரோசாப்ட் நிறுவனம் மொழி மாதிரிகளைப் பயிற்றுவிக்கும் திறன் கொண்ட ஏஐ சிப் ஒன்றினை மைக்ரோசாப்ட் உருவாக்கி இருப்பதாக அண்மையில் நாதெல்லா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்டின் அந்த தடத்தில் தொடர்ந்து அசுரப் பாய்ச்சல் எடுக்கும் வகையில் சாம் ஆல்ட்மேன் குழு இனி தங்களது பணிகளை மேற்கொள்ளும்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!
துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?
பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?