ஒரே நேரத்தில் 100 முட்டைகள்... உடைத்துக் குடித்து யூடியூபர் உவ்வேக் சாதனை!


வின்ஸி லானோனி என்ற யூடியூபர் 100 முட்டைகளை பச்சையாக உடைத்துக் குடித்து, அண்மையில் வெளியிட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

வின்ஸி அடிப்படையில் ஒரு பாடி பில்டர். இளம் வயதில் ஜிம்மில் பழியாகக் கிடந்து உடலை செதுக்கி வைத்துள்ளார். உடலோம்பல் பயிற்சிகளை மற்றவர்களுக்கும் தெரிவிக்க சமூக ஊடகங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்து, பின்னர் அதுவே பிழைப்பாகிப் போனார். ஃபாலோயர்ஸை ஈர்ப்பதற்காக சில தருணங்களில் விபரீத முயற்சிகளிலும் வின்ஸி ஈடுபடுவது உண்டு.

அப்படி அண்மையில் அவர் மேற்கொண்ட விஷப் பரீட்சை தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை 100 ஆயிரத்தை (1 லட்சம்) எட்டியதை கொண்டாடும் வகையில், ஒரே நேரத்தில் 100 முட்டைகளை பச்சையாக உடைத்து குடிக்க முயன்றார். அதற்கான இடமாக தான் வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்-ஐ தேர்ந்தெடுத்தார்.

சற்றே அளவில் பெரிய கண்ணாடிக் குடுவையில் 100 முட்டைகளை பச்சையாக உடைத்து சேர்த்தார். முட்டையின் வெண்ணிற திரவத்தில் மஞ்சள் கரு அத்தனையும் மிதக்க, குலோப்ஜாமூன் போல அவற்றை ஏந்தி நின்றார். வீடியோவின் நேரத்தை இழுப்பதற்காக யூடியூபர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் வளவளா பேச்சுடன், முட்டைகளை வயிற்றுக்குள் சரிக்க ஆரம்பித்தார்.

’உவ்வேக்’ உணர்வுடன் காண்பவர்களுக்கு வயிற்றைப் புரட்டச் செய்யும் வகையில், சகலவித அசௌகரிய முகபாவங்களுடன் ஒரு வழியாக முட்டைகளை விழுங்கி முடித்தார். இந்த முழுநீள வீடியோவை யூடியூபில் பதிவேற்றியதோடு, தனது பெயரிலான இதர சமூக ஊடகங்களிலும் பிரபல்யப்படுத்தி உள்ளார். சமூக ஊடகப் பயனர்கள் இதனை பாராட்டுவதோடு, ஒரு சிலர் கண்டிக்கவும் செய்து வருகின்றனர்.

மனித உடலில் ஒரே நேரத்தில் இத்தனை புரதம் சேர்வது ஆபத்தானது என்று பலரும் அக்கறையுடன் அறிவுறுத்தினார்கள். இன்னும் சிலர் வின்ஸி முட்டைகளை குடித்த வேகத்தில் கழிவறைக்கு ஓடியதை கிண்டலடித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x