ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 100 ரூபாயும், சவரனுக்கு 800 ரூபாயும் உயர்ந்துள்ளது, பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்தும், குறைந்தும் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதிக்கு பிறகு தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. நேற்று மாதத்தின் முதல் நாள் என்பதால் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்த 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஒரு சவரனுக்கு சுமார் 200 ரூபாய் அதிகரித்து இருந்ததே நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நகை வாங்குவோருக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியாக இன்றைய தங்கத்தின் விலை உயர்வு உள்ளது. தங்கத்தின் விலை இன்று வர்த்தக நேரம் துவங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 940க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று 46 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 800 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் நேற்று 50 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய் 20 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்துள்ளது தங்கம் வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.