உலகின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவில் மட்டும் 46 சதவீத பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.
இந்திய வர்த்தக, தொழில்துறை தேசிய மாநாடு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உரையாற்றினார். அவர் பேசியதாவது, “2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் நாட்டை அழைத்துச் செல்வதற்கான அடித்தளத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் இந்த அரசு அமைத்துள்ளது.
உள்நாட்டு தொழில்கள் அரசு ஆதரவுடன் விரைவாக வளர்ந்து வருகின்றன. நாட்டின் தொழில்வளம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் ஏதோ ஒரு திட்டத்தால் நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் பலனடைந்து வருகிறது. தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஊடுருவி உள்ளது. குக்கிராமங்களில் கூட மக்கள் யுபிஐ மூலம் மக்கள் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். உலகின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவில் மட்டும் 46 சதவீத பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது” இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. கியூஆர் கோடு ஸ்கேனர் இல்லாத மளிகைக் கடைகளே இன்று இல்லை எனும் அளவுக்கு அது பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான ‘யுபிஐ’ (Unified Payments Interface), நாம் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரவேற்பும் எளிமையான செயல்முறையும் பணம் செலுத்தும் அல்லது பெறும் முறையை இந்தியா முழுவதும் எளிதாக்கியுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் பாலிவுட் இயக்குநர்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர்... ‘எதிர்நீச்சல்’ நடிகை மதுமிதா கைது?!