இந்தியாவில் குறிப்பிடத்தக்க வகையில் வறுமை குறைந்திருப்பதாக, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, 10 ஆண்டு காலத்திய பாஜக ஆட்சியின் சாதனைகள் பெரும் விவாதத்துக்கு ஆளாகி வருகின்றன. அவற்றில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி பாஜக அரசை எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. மக்களுக்கான நலத்திட்டங்களை முறையாக செய்யாததால், ராமர் கோயில் உள்ளிட்ட மக்களை உணர்ச்சிகரமாக திரட்டும் நடவடிக்கைகளில் பாஜக அரசு இறங்கியிருப்பதாகவும் அவை குற்றம்சாட்டி வருகின்றன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் நிதி ஆயோக் அறிவிப்பு அமைந்துள்ளது.
அண்மையில் வெளியான நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டில் வறுமை 5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மக்கள் செழிப்பாக மாறி வருவதாகவும் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், 2022-23-ம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவினங்கள் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி 2011-12ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23ம் ஆண்டில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவினம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு தரவுகள், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் நுகர்வு உயர்வு என்பது சுமார் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதை காட்டுகின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் நுகர்வு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையிலான இடைவெளி கணிசமாக குறைந்து வருகிறது. 2011-12ல் 84 சதவீதமாக இருந்த இந்த இடைவெளி, 2022-23ல் 71 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே வேற்றுமை இடைவெளி 2004-05ல் 91 சதவீதமாக உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால், வரும் ஆண்டுகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வருவாய் மற்றும் நுகர்வு ஒரே மாதிரியாக மாறலாம் எனவும் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு புள்ளி விவரம் நாட்டின் செழிப்பு நிலையை கோடிட்டு காட்டுகிறது. இதன்படி கிராமப்புறங்களில், சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினத்தின் ஒரு பங்கான தானியங்களின் நுகர்வு 1999-2000ல் 22 சதவீதமாகவும், 2011-12ல் 10.7 சதவீதமாகவும் இருந்து. அதுவே இப்போது 5 சதவீதத்திற்கும் குறைவாக தணிந்துள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் நுகர்வு 1999-2000ல் 12 சதவீதமாகவும், 2011-12ல் 6 சதவீதத்துக்கும் மேலாகவும் இருந்தது, இப்போது 4 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் பொருள் மக்கள் கூடுதல் வருமானத்துடன் செழிப்பாக மாறுவதையும், அவர்கள் உணவைத் தவிர மற்ற விஷயங்களுக்கு அதிகம் செலவிடுவதையும், பதப்படுத்தப்பட்ட உணவுக்கு மக்கள் மாறுவதையும் காட்டுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!
திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!
ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!
அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!