அழைப்பவரின் பெயரை செல்போன் திரையில் காட்டும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் மோசடி மற்றும் தேவையற்ற அழைப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க, அழைப்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் சிஎன்ஏபி திட்டத்தை செயல்படுத்த மத்திய தொலைத்தொடா்புத் துறை பரிசீலித்தது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், முன்பின் அறியாத எண்ணிலிருந்து வரும் அழைப்பை மேற்கொள்ளும் நபா் அல்லது நிறுவனத்தின் பெயா் பயனரின் கைப்பேசி திரையில் தெரியும்.
இத்திட்டம் குறித்து பரிந்துரைகளை சமா்ப்பிக்குமாறு டிராய் அமைப்பிடம் மத்திய தொலைத்தொடா்புத்துறை கடந்த 2022-ம் ஆண்டு, மார்ச் மாதம் கேட்டுக்கொண்டது. அதையடுத்து இந்திய தொலைத் தொடர்புத் துறையில் அழைப்பாளர் பெயர் அறிவிப்பு சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக இறுதிப் பரிந்துரைகளை டிராய் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
ட்ரு காலர் செயலி இல்லாமலேயே செல்போனில் அழைப்பவர் யார் என்று தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன் திரையில் அழைப்பவரின் பெயரைக் காட்டும் வசதியை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று தொலை தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து செல்போன்களிலும் இந்த வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும் டிராய் பரிந்துரைத்துள்ளது. மோசடி அழைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நுகா்வோருக்கு இந்த வசதி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.