‘பிரதமர் மோடி ஒரு பாசிஸ்டா?’ மத்திய அரசின் கடும் கவனிப்புக்கு ஆளாகும் கூகுள் ’ஜெமினி’


ஜெமினி - மோடி

பிரதமர் மோடி குறித்து ஒருதலைப்பட்சமான கருத்தினை வெளியிட்டதாக, கூகுளின் சாட்பாட் ’ஜெமினி’, மத்திய அரசின் ’கவனிப்பு’க்கு ஆளாகி இருக்கிறது.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற சாட்பாட் அறிமுகம் உலகையே புரட்டிப்போட்டு வருகிறது. சாட்ஜிபிடி-க்கு போட்டியாக பல்வேறு டெக் நிறுவனங்களும் ரகம்ரகமான சாட்பாட் வரிசையை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வகையில் செயல்பாட்டில் உள்ள கூகுளின் ’ஜெமினி’ சாட்பாட் கடந்த சில தினங்களாக சர்ச்சைக்கு ஆளாகி வருகிறது.

ஜெமினி மீதான நிறவெறி சர்ச்சை

முன்னதாக இனபேதம் அடிப்படையில் ஏஐ படங்களை வழங்குவதாக ஜெமினி குற்றச்சாட்டுக்கு ஆளானது. அடுத்தபடியாக நேற்றைய தினம் இந்திய பிரதமர் குறித்தான ஒருதலைப்பட்சமான கருத்தினை வெளியிட்டதாக புதிய சர்ச்சையில் சிக்கியது. ’இவர் ஒரு பாசிஸ்டா?’ என்ற கேள்வி பல்வேறு உலகத் தலைவர்களை முன்வைத்து ஜெமினியிடம் எழுப்பப்பட்டன. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து இதே கேள்வி எழுப்பப்பட்டபோது, நைச்சியமான பதில் மூலம் ஜெமினி நழுவியது.

ஆனால் அதே கேள்வி மோடி குறித்து எழுப்பப்பட்டதில் அப்பட்டமான ஒரு பதிலை முன்வைத்தது. ’பாஜகவின் இந்து தேசிய சித்தாந்தம், எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறை, மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை’ உள்ளிட்டவற்றை முன்வைத்து மோடி குறித்து ஆட்சேபகரமான பதிலை ஜெமினி தந்தது. இவை சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்திய அரசின் கவனத்துக்கும் சென்றது.

கூகுள் ஜெமினி

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணையமைச்சரான ராஜிவ் சந்திரசேகர், கூகுளின் ஜெமினி அளித்த பதில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளை நேரடியாக மீறுவதாக உள்ளது என்று எச்சரித்தார். பதறிப்போன கூகுள் தரப்பு உடனடியாக அளித்த விளக்கத்தில், ”ஜெமினி ஒரு படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறன் கருவியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிகழ்வுகள், அரசியல் தலைப்புகள் அல்லது செய்திகள் பற்றிய சில தூண்டுதல்களுக்கு பதிலளிக்கும்போது நம்பகமானதாக இருக்காது" என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜெமினியை தொடர்ந்து மேம்படுத்துவதில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x